தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை பொதுஜன பெரமுனவினர் ஏற்றுக் கொள்வார்களா ? - உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 14, 2023

தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை பொதுஜன பெரமுனவினர் ஏற்றுக் கொள்வார்களா ? - உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

சிங்கள பௌத்த தனித்துவத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுனவினர் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை ஏற்றுக் கொள்வார்களா ? ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாடுகளுக்கு பொதுஜன பெரமுனவினர் பொறுப்புக்கூற வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

புறக்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சட்டவிரோத கட்டளையை ஏற்க மறுத்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அநுர மனதுங்க தற்துணிவுடன் பதவி விலகியுள்ளார்.

அமைச்சரவை தீர்மானத்தை மாத்திரம் செயற்படுத்த வேண்டிய தேவை தொல்பொருள் திணைக்களத்துக்கு கிடையாது.

தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் விடயதானங்களுக்கு அமையவே தொல்பொருள் திணைக்களம் செயற்பட வேண்டும். அதனை விடுத்து ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய செயற்பட முடியாது.

குறுந்தூர் மலைக்கு 275 ஏக்கர் நிலப்பரப்பு காணி அவசியமற்றது. நிலப்பரப்பை குறைக்குமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையை தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மறுத்துள்ளார்.

'வரலாற்றை நீங்கள் எனக்கு குறிப்பிடுகின்றீர்களா அல்லது நான் உங்களுக்கு வரலாற்றை கற்பிக்கவா,' என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை நோக்கி குறிப்பிட்ட கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரிமாற்றப்படுகிறது.

தவறான வரலாற்றை குறிப்பிட்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும் வடக்கில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

ஆனால் குறுந்தூர் விகாரை கி.மு. 110-103 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள அரசனால் நிர்மாணிக்கப்பட்டது என தொல்பொருள் சான்றாதாரங்கள் குறிப்பிடுகின்றன.

மகா விகாரையை காட்டிலும் குறுந்தூர் விகாரையின் நிலப்பரப்பை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். மகா விகாரையின் நில அளவை மற்றும் தொல்பொருள் மரபுரிமைகள் அளவீட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஆகவே, அநுராதபுரம் மகா விகாரையுடன் குறுந்தூர் விகாரையை ஒப்பிட முடியாது. குறுந்தூர் மலையில் தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் நாட்டப்பட்ட நில அளவை தூண்களை அகற்றுமாறு ஜனாதிபதி கட்டளை பிறப்பித்துள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் அரசியல்வாதிகளின் கட்டளைக்கு அமைய ஜனாதிபதி செயற்படுகிறார். அரசியல்வாதிகளின் ஆலோசனைக்கு அமைய தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பில் தீர்மானம் எடுத்தால் 1979 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்ட கிரிவெட்டி விகாரைக்கு நேர்ந்த கதியே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளுக்கு நேரிடும்.

பௌத்த சிங்கள தனித்துவத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுனவினர் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் தீர்மானங்களை ஏற்றுக் கொள்வார்களா? ஜனாதிபதியின் செயற்பாடுகள் பொதுஜன பெரமுனவுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment