தொல்லியல் நடவடிக்கைகளுக்கு எனக்கூறி முல்லைத்தீவு குருந்தூர் மலை மற்றும் திருகோணமலை திரியாய விகாரை பகுதியில் 5,000 ஏக்கர் நிலப்பரப்பை கோரியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்பிக்க விசேட நிபுணர் குழுவை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதனடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை (16) இந்த விசேட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி செய்தி மூலங்கள் உறுதிப்படுத்தின.
தொல்பொருள் நடவடிக்கைகளுக்கென முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரை மற்றும் திருகோணமலை, திரியாய் விகாரை ஆகியவற்றுக்காக காணிகளை கோரியுள்ளமை தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இவ்வாறு முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரைக்கு 3,000 ஏக்கர் காணியும், திருகோணமலை திரியாய் விகாரைக்கு 2,000 ஏக்கர் காணியும் கோரப்பட்டுள்ளன.
வன வள பாதுகாப்பு திணைக்களம், காணி திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றுக்குச் சொந்தமான அரசாங்க காணிகளில் இந்தளவு காணிகளை தொல்பொருள் பிரதேசங்களென தெரிவித்து எத்தகைய அடிப்படையில் கோரப்படுகிறதென்பதை உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட தொல்பொருள் ஜனாதிபதி செயலணி மூலம் மேற்படி காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்தக் காணிகள் தொல்பொருள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டுமென அந்த செயலணியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பௌத்த தலைமையகமாக கருதப்படும் அநுராதபுரம் மஹாபோதி விகாரைக்கோ அல்லது சிறந்த பாரம்பரிய மரபுரிமை சொத்தாக கணிக்கப்படும் சிகிரியாவுக்கும் கூட இந்தளவு காணிகள் கிடையாதென்றும் எனினும், குருந்தூர்மலை விகாரை மற்றும் திரியாய் விகாரை ஆகியவற்றுக்கு இந்தளவு காணிகள் எந்த அடிப்படையில் கோரப்பட்டுள்ளதென்பதை விஞ்ஞானபூர்வத் தரவுகள் மற்றும் ஆதாரங்களுடன் ஆராய்வதற்காகவே ஜனாதிபதி இந்த நிபுணர்கள் குழுவை நியமிக்கவுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment