அரசாங்கத்தின் நிவாரணத் திட்டத்தில் யாருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கமாட்டோம் : சமன் ரத்னப்பிரிய - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 28, 2023

அரசாங்கத்தின் நிவாரணத் திட்டத்தில் யாருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கமாட்டோம் : சமன் ரத்னப்பிரிய

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்தின் நிவாரணத் திட்டத்தில் யாருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கப் போவதில்லை. அதேபோன்று தகுதியற்றவர்களுக்கு வழங்குவதற்கும் இடமளிக்கமாட்டோம் என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கத்தின் அஸ்வெசும நிவாரணத் திட்டம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் சிலரும் இதன் நடவடிக்கை தொடர்பாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரம் அஸ்வெசும நிவாரணத் திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களில் ஒரு இலட்சத்தி 88 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மேன்முறையீடு செய்திருக்கின்றனர். அதனால் இந்த திட்டத்தில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

அத்துடன் நிவாரணம் பெற்றுக் கொள்ள விண்ணப்பித்து தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டிருந்தால், அவர்கள் அது தொடர்பில் முறையிடலாம். அதனை செய்ய தெரியாதவர்கள் எங்களிடம் வந்து தகவல்களை தெரிவித்தால் அவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அதேபோன்று விவாரணம் பெறுவதற்கு தகுதி இல்லாத பலரும் நிவாரணத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட எதிர்ப்புகள் முறையிடப்பட்டிருக்கின்றன. அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

வசதி குறைந்த குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்துக்கு அமையவே இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது. அதனால் வசதி படைத்தவர்கள் யாராவது இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தால், அவர்களை அந்தப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

மேலும் விசேட தேவையுடையர்கள், சிறுநீரக பாதிப்பு, முதியோர்கள் மற்றும் நிரந்தர நோாயாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்களை இந்த நிவாரணத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளாமல் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே அரசாங்கத்தின் நிவாரணத் திட்டம் கிடைக்கப்பட வேண்டியவர்களுக்கு கிடைக்கும் வகையில் முறையாக நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாருக்கும் அநீதி ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டோம். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இந்தப் பிரச்சினரகளை தீர்ப்போம். அப்போது மக்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி செலுத்துவார்கள் என்றார்.

No comments:

Post a Comment