(இராஜதுரை ஹஷான்)
69 இலட்சம் மக்கள் பொம்மைகள் அல்ல என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாடுகளுக்கு பொதுஜன பெரமுன துணை செல்லுமா என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகபெரும தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் என்றும் இடம்பெறாத சம்பவங்கள்தான் தற்போது இடம்பெறுகிறது. நிறைவேற்றுத்துறை அதிகாரம் சட்டவாக்கத்துறையின் மேன்மையை மலினப்படுத்துகிறது.
அரசாங்கத்தின் முறையற்ற அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்கு எதிராக நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகின்ற நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை 1) இடம்பெறவுள்ளது.
தேசிய கடன் மறுசீரமைப்பால் வங்கிக் கட்டமைப்பு பாதிக்கப்படாது என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால், தேசிய கடன் எவ்வாறு மறுசீரமைக்கப்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு அமையவே தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளிடமிருந்து ஆலோசனைகள் ஏதும் பெற்றுக் கொள்ளப்படவில்லை. ஆகவே, கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் பாராளுமன்றத்தின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
69 இலட்ம் மக்களின் ஆணை தவறாக பயன்படுத்தப்படுகிறது. 69 இலட்சம் மக்கள் பொம்மைகள் அல்ல என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும்.
பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கை என குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி முன்னெடுக்கும் முறையற்ற செயற்பாடுகளுக்கு பொதுஜன பெரமுன துணை செல்லுமா என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment