இலங்கை சுங்கத் தலைமையகத்துக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழு - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 28, 2023

இலங்கை சுங்கத் தலைமையகத்துக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழு

பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழு 2023.06.23ஆம் திகதி இலங்கை சுங்கத் தலைமையகம் உள்ளிட்ட அதன் வளாகங்களில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டது.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கான வழி வகைகள் பற்றிய குழுவுக்கு பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்வதற்குக் காணப்படும் அதிகாரத்துக்கு அமைய இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

வழி வகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, அசோக் அபேசிங்க, கலாநிதி ஹர்ஷ டி. சில்வா மற்றும் காமினி வலேபொட ஆகியோர் இதில் இணைந்து கொண்டனர்.
அரசாங்கத்திற்கு வருமானத்தை வழங்கும் பிரதான நிறுவனங்களில் ஒன்றாக இலங்கை சுங்கத்தின் செயன்முறையிலுள்ள பலவீனங்களைக் கண்டறிந்து, வினைத்திறனான சேவையை வழங்குதல் மற்றும் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான பரிந்துரைகளை வழங்கும் நோக்கில் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய, சுங்கத் தலைமையகத்தின் தகவல் தொழிநுட்பத் பிரிவு, துறைமுக வளாகத்திற்குள் அமைந்துள்ள கொள்கலன் ஆய்வுப் (Scan) பிரிவு மற்றும் ஒருகொடவத்தையில் அமைந்துள்ள இலங்கை சுங்கத்தின் கொல்கலன் பரிசீலிக்கும் பகுதி உள்ளிட்ட பிரிவுகளின் நடவடிக்கைகள் இதன்போது கண்காணிக்கப்பட்டன.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயல்பாட்டில் இருக்கும் தாமதங்களைத் தவிர்ப்பதன் மூலம் வினைத்திறனான சேவையை வழங்குதல், வருமானத்தை அதிகரித்தல், தற்போதைய செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன கணினித் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை இதன்போது குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சுங்கச் செயன்முறையில் தற்பொழுது காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குப் பிரதான செயற்திறன் குறிக்கட்டிகளை (KPIs) பயன்படுத்துவதன் அவசியம் உள்ளிட்ட சாதகமான நடவடிக்கைகள் தொடர்பில் குழுவின் தலைவர் விளக்கமளித்தார்.
இறக்குமதியாளர்களுக்கு விரைவாக சேவைகளை வழங்குவதற்கு வார்ப் கிளார்க் (Wharf Clerk) சேவையை மிகவும் வினைத்திறனாக்குவதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், துறைமுகம், விமான நிலையம் போன்று இலங்கை சுங்கமும் நாள் முழுவதும் தொடர்ச்சியான சேவையை வழங்குவதன் தேவையை சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, உரிய பரிந்துரைகள் அடங்கிய முழுமையான அறிக்கையினை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கண்காணிப்பு விஜயத்துக்கு முன்னர் இலங்கை சுங்கத்தின் அதிகாரிகள் மற்றும் இறக்குமதி, ஏற்றுமதி நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினரும் வேறு வேறாக பாராளுமன்றத்தில் இந்தக் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டு அவர்களுக்குக் காணப்படும் சிக்கல்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பதில் சுங்கப் பணிப்பாளர் நாயகம் கே. விமலேந்திரராஜா உள்ளிட்ட இலங்கை சங்கத்தின் உயரதிகாரிகள் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவின் செயலாளர் புத்திகா அபேசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment