லங்கா சதொச நிறுவனத்துக்கு 600 மில்லியன் ரூபா நஷ்டம் : அரிசி இறக்குமதியில் 6 பில்லியன் ரூபா நஷ்டம் - கோப் குழு - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 28, 2023

லங்கா சதொச நிறுவனத்துக்கு 600 மில்லியன் ரூபா நஷ்டம் : அரிசி இறக்குமதியில் 6 பில்லியன் ரூபா நஷ்டம் - கோப் குழு

லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அரிசி இறக்குமதி காரணமாக 6 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், லங்கா சதொச நிறுவனத்தில் ஏறத்தாழ 600 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் புலப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.06.22 ஆம் திகதி கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) லங்கா சதொச லிமிடட் நிறுவனம் அழைக்கப்பட்டது.

இதில் நிறுவனத்தின் 2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்த விடயங்கள் ஆராயப்பட்டது.

2021-24 காலப்பகுதிக்கு உறுதியான திட்டம் இருந்தபோதும் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை. இதனால், 2028 ஆம் ஆண்டு வரை விரிவான திட்டத்தை தயாரித்து, அதன் செயல்பாடுகள் குறித்து 2 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார். ஒரே நேரத்தில் செயற்திட்டத்தை தயாரிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

உள்ளகக் கணக்காய்வுப் பணியாளர்களாக 21 பேர் இருந்த போதிலும் 2021ஆம் ஆண்டுக்கான மூன்று கணக்காய்வு விசாரணைகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், 2022ஆம் ஆண்டுக்காக எவ்வித கணக்காய்வு விசாரணைகளும் முன்வைக்கப்படவில்லையென்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

நிறுவனத்தின் கணக்குகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதில் உள்ள சிரமம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, உள்ளக சுற்றறிக்கை ஊடாக உள்ளக கணக்காய்வு பிரிவிற்கு அறிவிக்கப்பட வேண்டும் என கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

2014-2015 காலத்தில் லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அரிசி இறக்குமதி காரணமாக 6 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது.

அரிசி இறக்குமதி செய்யப்பட்டு அவை காலவதியானமையால் விலங்குத் தீவணமாக விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் கணக்காய்வாளர் நாயகத்தினால் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய எதிர்காலத்தில் கலந்துரையாடல் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

லங்கா சதொச நிறுவனத்தில் 2022ஆம் ஆண்டின் நஷ்டம் ஏறத்தாழ 600 மில்லியன் ரூபா என்றும் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அத்துடன் 2021 டிசம்பர் 31ஆம் திகதியில் மொத்த நஷ்டம் 15 பில்லியன் ரூபாவுக்கு அண்மித்த பெறுமதி என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

லங்கா சதொச நிறுவனம் பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்குப் பதிலாக, புறக்கோட்டைப் பிரதேசத்திலிருந்து பொருட்களை வாங்கி விற்பனை செய்வதன் மூலம் வாடிக்கையாளருக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்து நிறுவனத்திற்கு அதிக இலாபம் ஈட்டும் வாய்ப்பு தவறவிடப்படுவதாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும், அரசு எடுக்கும் கொள்கை ரீதியான முடிவுகளின் அடிப்படையில் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும், பணத்தை வசூலிப்பதில் உள்ள தாமதத்தினால் ஏற்படும் இழப்புக் குறித்து அதிகாரிகள் உண்மைகளை விளக்கினர்.

சதொசவிற்கு பொருத்தமான வர்த்தக மாதிரியைத் தயார் செய்ய வேண்டியதன் அவசியத்தை கோப் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

உள்ளக முகாமைத்துவப் பலவீனங்கள் மற்றும் வெளிப்புறத் தலையீடுகள் இன்றி சுயாதீனமாக முடிவெடுக்கக்கூடிய வர்த்தக மாதிரியின் கீழ் இந்த நிறுவனத்தை நியமிக்க வேண்டியதன் அவசியத்தைக் கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்க்கக்கூடிய வகையில் லங்கா சதொச நிறுவனத்தை செயற்படுத்த வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், இந்த நிறுவனத்தில் 1123 பணியாளர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அவற்றை நிரப்புவதற்கு முன்னர், அதனை மதிப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் கணக்காய்வாளர் நாயகம் வலியுறுத்தினார்.

ஓகஸ்ட் 22ஆம் திகதி லங்கா சதொச நிறுவனத்தை மீண்டும் அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, தயாசிறி ஜயசேகர, நிமல் லான்சா, ஜயந்த சமரவீர, எஸ்.எம்.மரிக்கார், எஸ்.எம்.எம். முஷாரப், சஞ்சீவ எதிரிமான்ன, சாணக்கியன் இராசமாணிக்கம், மதுர விதானகே, பேராசிரியர் சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment