உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுவை ரத்துச் செய்வதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ள பொதுநிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஒத்திப்போடப்பட்டுவரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் விரைவில் இடம்பெறும் என்ற நிலை காணப்படாதபோது வேட்பு மனுவை ரத்துச் செய்து தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் மீள வேட்பு மனுவை கோருவது மிகவும் பொருத்தமானது என அந்த குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள், அமைச்சர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதற்கிணங்க உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுவை ரத்துச் செய்வதற்கான சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அதன்போது தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியிலுள்ள 340 உள்ளுராட்சி சபைகளுக்காக 8,711 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்காக வேட்பாளர்கள் 80,672 பேர் முன்வந்திருந்தனர்.
அந்த வகையில் 24 மாநகர சபை, 41 நகர சபை, 275 பிரதேச சபை ஆகியவற்றுக்காகவே இவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment