சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சற்று முன்னர் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான நவீன் திஸாநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சத்தியப் பிரமாண நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவித்த நவீன் திஸாநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிற்காக முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
கடந்த காலங்களில் நாடு கடுமையான நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த போதிலும் ஜனாதிபதியால் நடைமுறைப்படுத்தப்பட்ட சரியான திட்டங்களின் பலனாக சாதகமான மாற்றங்களை காண முடிவதாக சுட்டிக்காட்டிய அவர், சப்ரகமுவ மாகாணத்தின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் உறுதியளித்தார்.
குறிப்பாக சப்ரகமுவ மாகாண மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பில் விசேட அவதானம் செலுத்தும் அதேநேரம் அரசியல் கட்சி தலைவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக இருந்த டிக்கிரி கொப்பேகடுவ அண்மையில் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, குறித்த இடத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment