ஒரே நாளில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் சடலமாக மீட்பு - News View

About Us

About Us

Breaking

Friday, June 16, 2023

ஒரே நாளில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் சடலமாக மீட்பு

ஒரே நாளில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவன் ஒருவர் இன்று (16) காலை பல்கலைக்கழகத்துக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பீட மாணவர்கள் தங்கும் அக்பர் விடுதியின் மூன்றாவது மாடியில் அறையொன்றில் உள்ள குளியலறையில் இன்று (16) அதிகாலை அவரது சடலம் தூக்கில் தொங்குவதைப் பார்த்த மாணவர்கள், பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

22 வயதுடைய நகுனராசா குகதீசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். உயிரிழந்த மாணவருடன் மேலும் மூன்று மாணவர்கள் விடுதியில் உள்ள அறையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகமும் பேராதனை பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவரின் உடல் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16) மீட்கப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை - நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொரலஸ்கமுவ கட்டுவல பிரதேசத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட மாணவர் விடுதியின் தரைத்தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுதியின் மேல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் இன்று (16) அதிகாலை 4.30 மணியளவில் எழுந்து கீழே வந்து கொண்டிருந்தபோது இதனை கண்டு அச்சமடைந்து ஏனையோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து மற்ற மாணவர்களும் வந்து மாணவர் உயிருடன் இருப்பதாக நினைத்து கயிற்றை அறுத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். மஹரகம மரண விசாரணை அதிகாரி எச்.எம்.டக்ளஸ் ரூபசிறி சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்தினார்.

மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், மஹரகம பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சேலக ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சம்பவ இடத்துக்கு சென்ற நீதிபதி உடலை பார்வையிட்ட நிலையில் உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் மாணவனின் மரணம் தொடர்பில் நுகேகொட பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமையை மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் இரு பிரபல பல்கலைகழகங்களில் ஒரே நாளில் உயிரை மாய்த்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment