(எம்.மனோசித்ரா)
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரிய பயிலுனர்களுக்கான பயிற்சிக் காலத்தை 4 ஆண்டுகளாக அதிகரித்து, அவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக்குவதற்கான யோசனை தொடர்பில் அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரிய பயிற்சிகளை நிறைவு செய்த டிப்ளோமாதாரிகளுக்கு தேசிய பாடசாலைகளுக்கும், மேல் மாகாண பாடசாலைகளுக்கும் நியமனம் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (16) கொழும்பிலுள்ள அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கௌரவ ஜனாதிபதி கல்வி அமைச்சராக, 1985 ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவகச் சட்டம் மற்றும் 1986 ஆம் ஆண்டு கல்வியியற் கல்லூரிகள் சட்டத்தைக் கொண்டு வந்த பிறகுதான் மூன்று வருட பயிற்சிக்குப் பின்னர் கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களை நமது பாடசாலைக் கட்டமைப்பில் பணிக்கு அமர்த்தும் வாய்ப்புக் கிடைத்தது.
இன்று இலங்கையில் 10135 அரச பாடசாலைகளில் 2 இலட்சத்து 50000 ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். 41 இலட்சம் மாணவர்கள் அரச பாடசாலைகளிலும், ஒரு இலட்சத்து 50000 மாணவர்கள் தனியார் பாடசாலைகளிலும் கல்வி கற்கின்றனர்.
பயிற்சி பெற்ற மற்றும் தகுதியான ஆசிரியர்களை பாடசாலைகளுக்கு வழங்குவதற்காகத்தான் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நாட்டிலுள்ள 19 தேசிய கல்வியியற் கல்லூரிகளிலும் பயிற்சி பெறுகின்ற ஆசிரிய பயிலுனர்கள் டிப்ளோமாதாரிகளாக வெளியேறுகின்றனர்.
எனினும் இவர்கள் பயிற்சி பெறும் கால எல்லையை 4 வருடங்களாக அதிகரித்து, அவர்களுக்கு பட்டப்படிப்பை வழங்கி பட்டதாரி ஆசிரியர்களாக்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை தொடர்பான மதிப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது டிப்ளோமாதாரிகளாகவுள்ள ஆசிரியர்களுக்கு தமது உயர் கல்வியை தொடர்வதற்கான வசதிகளை கல்வி அமைச்சு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
கல்வித்துறையில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஆசிரியர்கள் தம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். 2030ஆம் ஆண்டாகும்போது நவீன கல்வி முறைமையைக் கொண்ட நாடாக இலங்கை மாற்றமடைந்திருக்க வேண்டும்.
எனவே இன்று நியமனம் பெறும் உங்கள் அனைவருக்கும் இந்த இலக்கை அடைவதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்கான பொறுப்பும் கடமையும் காணப்படுகிறது. அதற்கான சகல வசதிகளையும் கல்வி அமைச்சு ஏற்படுத்திக் கொடுக்கும் என்றார்.
அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ ,பிரசன்ன ரணதுங்க, விதுர விக்ரமநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, பியல் நிஷாந்த, சுரேன் ராகவன், அரவிந்த குமார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க, கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க, மேல்மாகாண பிரதம செயலாளர் பிரதீப் யசரத்ன, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, கல்வியியற் கல்லூரிகளின் பீடாதிபதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment