(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாவிட்டால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துங்கள் நாங்கள் அதற்குத் தயார். 50 வீத வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியுமா இல்லையா என்பதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்க்கையில், வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும், பணமில்லை எனக்கூறி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டாலும், சுற்றறிக்கைகள் மூலம் அரசியல் கைக்கூலிகளை நியமித்து உள்ளூராட்சி மன்றங்களை தமக்கு விருப்பமானவாறு கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
இந்த சுற்றறிக்கையின் மூலம், உள்ளூராட்சி மன்றங்களின் பணிகளை ஒருங்கிணைக்க, ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க, ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதிய சபைகளை ஏற்படுத்தாமல் அரசியல் அடியாட்கள் மூலம் உள்ளூராட்சி மன்றங்களை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை நாங்கள் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்.
அத்துடன், நீதித்துறைசாரார்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனவும், பாராளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் 50 சதவீத பெரும்பான்மை இல்லை எனவும் தெரிவித்திருந்தார். 50 வீத பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என பார்ப்பதற்கு தேர்தலை நடத்துமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாவிட்டால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துங்கள். அதற்கு தேவையான பெரும்பான்மையை நாங்கள் பாராளுமன்றத்தில் பெற்றுத்தர தயாராக இருக்கிறோம்.
ஜனாதிபதி உயர் நீதிமன்ற நீதிபதிகளை மேன்முறையீட்டு நீதிபதிகளை விருந்துபசாரத்துக்கு அழைத்து இது போன்ற நீதி நியாயமான நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டிய நிலையில், விருந்துபசார நிகழ்ச்சிகளை நடத்துவது தார்மீகமல்ல, சுதந்திர தீர்ப்புகளுக்கு இது இடையூறாக அமையும்.
எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறும், இதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான கூடிய ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment