(எம்.மனோசித்ரா)
நாட்டில் அத்தியாவசிய மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற 60 வகையான மருந்துகளின் விலைகளை, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 16 சதவீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (06) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மருந்துகளின் விலைகள் 16 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளன. வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அதிகரிக்கப்பட்ட 60 வகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும். ஏனைய மருந்துகளின் விலைகளும் படிப்படியாக குறைவடையும்.
2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையால் மருந்துகளின் விலைகளை நிர்ணயம் செய்தல் மற்றும் அது தொடர்பான அனைத்து விடயங்களுக்குமான ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையைக் கருத்திற் கொண்டு, மருந்துகளின் உயர்ந்தபட்ச சில்லறை விலைகளை ஒரு சில சந்தர்ப்பங்களில் 97 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்கத்தால் கடைப்பிடிக்கப்படுகின்ற சமகால பொருளாதார உறுதிப்பாட்டு வேலைத்திட்டத்தின் விளைவாக டொலரின் பெறுமதி குறிப்பிடத்தக்களவு குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது.
அதற்கமைய, 60 வகையான மருந்துகளின் உயர்ந்தபட்ச சில்லறை விலைகளை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 16 சதவீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி 3 மாதங்களுக்கொருமுறை மருந்துகளின் விலைகளை மீளாய்வு செய்வதற்காகவும் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய 3 மாதங்களுக்கொருமுறை மருந்துகளின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.
No comments:
Post a Comment