நாட்டில் நிலவும் வைத்தியர்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்திக்க எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள், 406 வைத்தியர்களை புதிதாக சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2200 தாதிமார்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுத்து, அடுத்த மாதம் நியமனம் வழங்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், புதிய வைத்தியர்கள் 406 பேர் எதிர்வரும் (27) முன்பதாக நியமிக்கப்படுவர். இவர்கள் உடனடியாக ஆசிரியர் வைத்தியசாலைகளில் இணைத்துக் கொள்ளப்படுவர்.
அதேபோன்று குடும்ப சுகாதார சேவை பிரிவுக்காக 222 பேருக்கு கடந்த வாரம் நியமனம் வழங்கப்பட்டது. இதனால், நிலவிலய தட்டுப்பாடு ஓரளவு நிவர்த்திக்கப்பட்டது.
அத்தோடு மேலும் 600 பேருக்கு பயிற்சிகளை வழங்கி அவர்களை, இணைத்துக் கொள்ள விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், விரைவில் 2,200 தாதியருக்கு நியமனங்களை வழங்க முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நியமனங்கள் எதிர்வரும் ஒன்றரை மாத காலத்திற்குள் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட வேண்டிய உபகரணங்களைத் திருத்துவதற்காக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்தில் சில குறிப்பிடத்தக்க பின்னடைவுகளை சந்தித்தாலும், எதிர்காலத்தில் சிறந்த முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, மருந்துகளின் விலைகள் தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர், நாளை (இன்று) முதல் மருந்துகளின் விலைகளை 16 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்குமிடையில் மருந்துகளின் விலைகளை மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment