பாராளுமன்ற செயலாளர் நாயகமாக குஷானி ரோஹணதீர நியமனம் : அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 16, 2023

பாராளுமன்ற செயலாளர் நாயகமாக குஷானி ரோஹணதீர நியமனம் : அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

பாராளுமன்ற செயலாளர் நாயகமாக, குஷானி ரோஹணதீர நியமிக்கப்படவுள்ளார்.

எதிர்வரும் மே 23 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திருமதி கே.ஏ. ரோஹணதீர, தற்போதைய பாராளுமன்ற பணிக்குழாம் பிரதானியும் பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளருமாக பணியாற்றி வருகின்றார்.

அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்துடன் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

1999 ஆம் ஆண்டில் பாராளுமன்ற அதிகாரியாக இலங்கை பாராளுமன்ற சேவைக்கு இணைந்து கொண்ட சட்டத்தரணி திருமதி. குஷானி ரோஹணதீர, 2012 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகமாக (நிர்வாகம்) பதவி வகித்தார். 

அதனைத் தொடர்ந்து, 2020 இல் பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் மற்றும் பணிக்குழாம் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.

அம்பலாங்கொடை தர்மாஷோக்க வித்தியாலயத்தின் புகழ்பெற்ற பழைய மாணவியான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளார். 

அதனை அடுத்து இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை இளமானிப்பட்டத்தை பூர்த்தி செய்த இவர், சட்டக் கல்லூரியில் பரீட்சைக்குத் தோற்றி சட்டத்தரணியாக உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

தற்போது பாராளுமன்ற செயலாளர் நாயகமாக தம்மிக தஸநாயக்க செயற்பட்டு வருகின்றார். 

1994 இல் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகமாக தனது பாராளுமன்ற பணியைத் தொடங்கியதோடு 2003 இல் பிரதி செயலாளர் நாயகமாக உயர்வு பெற்றார். அவர் 2012 இல் பாராளுமன்ற செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றச் செயலாளர் நாயகம்
பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தின் பிரதம நிறைவேற்று அலுவலராவார். அவர் பாராளுமன்றப் பேரவையின் இணக்கத்துடன், ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார். 

பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பதவி, அரசியலமைப்பு ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு பதவியாகும். 

பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பிரதான பணிகளில் ஒன்று, பாராளுமன்ற நடவடிக்கை முறை, சட்டமூலங்கள் அரசியலமைப்புக்கு இயைபாகவிருத்தல், நிலையியற் கட்டளைகள், சிறப்புரிமைகள் ஆகியன தொடர்பான விடயங்களிலும், பாராளுமன்ற நடவடிக்கை பற்றிய வேறு ஏதேனும் விடயங்களிலும் சபாநாயகர் மற்றும் ஏனைய தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு, ஆலோசனை வழங்குதலாகும். 

பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அவரது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குப் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகமும் உதவுவர். 

செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தின் பிரதம நிருவாகத்தரும் கணக்கீட்டு அலுவலருமாவார். பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாளர்கள் சபாநாயகரின் அங்கீகாரத்துடன் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்படுவர். 

செயலாளர் நாயகம் அல்லது அவரின் நியமத்தர் பாராளுமன்றத்தினால் தாபிக்கப்படும் எல்லாக் குழுக்களுக்கும் செயலாளராகப் பணியாற்றுவார்.

No comments:

Post a Comment