வெலிகம, தெனிபிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெனிபிட்டிய முல்லபொக்க வீதிக்கு திரும்பும் சந்திக்கு அண்மித்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக, வெலிகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வெலிகம, பெலேன பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு (15) இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் உயிரிழந்தவரின் மகனான 20 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணமடைந்த நபர் குற்றமொன்று தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவராவார்.
சடலம் வெலிகம, வலான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment