பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உரிய பங்குதாரர்களுடன் ஆலோசனைகள் எதனையும் மேற்கொள்ளப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்டத்தின் ஆட்சியை உட்படுத்தும் நாட்டின் பிரஜைகளின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்த சட்டமூலத்தையும் கேள்விக்குட்படுத்த தயங்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளது.
மார்ச் 23 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வெளியிட்டுள்ளதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பிட்ட சட்டமூலம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி விட்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அறிமுகப்படுத்த முயல்கின்றது.
பிரஜைகளின் உரிமைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறைப்பதற்கு ஒடுக்குவதற்கு எந்த சட்டமூலத்தையும் அறிமுகப்படுத்தக்கூடாது என கருதுவதாக தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் கடும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட இந்த விடயத்தில் தொடர்புபட்ட தரப்புகளுடன் உரிய ஆலோசனையின்றி இந்த சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது என கருதுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே பரந்துபட்ட பங்குதாரர் ஆலோசனை மற்றும் இந்த விடயத்தில் தொடர்புபட்டவர்களின் கரிசனைகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் வரை சட்டமூலத்தை ஒத்திவைப்பது குறித்து அரசாங்கம் ஆராய வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment