(இராஜதுரை ஹஷான்)
மறுசீரமைக்கப்படும் அரச நிறுவனங்களின் மனித வள முகாமைத்துவம் தொடர்பில் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளோம். மறுசீரமைப்பை தொடர்ந்து அரச சேவையில் வினைத்திறனாக செயற்படாதவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படமாட்டாது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இலங்கை இதுவரை 16 தடவைகள் பெற்றுக் கொண்டுள்ளது. இருப்பினும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தப்படவில்லை.
நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் தீர்மானத்தை அரசாங்கம் எடுத்தாலும், தொழிற்சங்க போராட்டங்களினால் அந்த தீர்மானம் செயலிழந்துள்ளது.
தொழிற்சங்க போராட்டங்களுக்கு அடிபணிந்து இந்த தடவையும் வழமைபோல் செயற்பட முடியாது. நட்டமடையும் அரச நிறுவனங்களை நிச்சயம் மறுசீரமைக்க வேண்டும். தொழிற்சங்கத்தினர் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை முழுமையாக செயற்படுத்துவோம்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நிபுணத்துவ குழு கடந்த ஒக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டது, குழுவினர் ஆரம்பகட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். எதிர்வரும் மாதமளவில் அந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படும். பாராளுமன்றத்தின் ஊடாகவே அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும்.
மின்சாரசாரத்துறை சேவை தொடர்பில் 2001 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை திருத்தியமைக்க ஆரம்பகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 ஆண்டு காலத்தை உள்ளடக்கிய வகையில் மின்சார சட்டத்தை திருத்தியமைக்கும் வகையில் சட்டவரைபு தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் எதிர்வரும் மே மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்.
நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்தால் தமது தொழில், ஓய்வூதியம் உட்பட ஏனைய வரப்பிரசாதங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ? என தொழிற்சங்கத்தினர் அச்சமடைந்துள்ளார்கள். மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.
மறுசீரமைக்கப்படும் அரச நிறுவனங்களின் மனித வள முகாமைத்துவம் தொடர்பில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட சர்வதேச நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளோம். மறுசீரமைப்பு நடவடிக்கையால் எவரது தொழில் உரிமைகளுக்கும் பாதிப்பு ஏற்படாது.
அரச சேவையில் உள்ள அனைவருக்கும் வருடாந்த சம்பள அதிகரிப்பு மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவு என சகல வரப்பிரசாதங்களும் கிடைக்கப் பெறுகிறது. இதில் சிறந்த முறையில் பணியாற்றுபவரும், பணியாற்றாதவரும் உள்ளடங்குவார்கள்.
மறுசீரமைக்கப்பட்டதன் பின்னர் சிறந்த முறையில் வினைத்திறனாக சேவையாற்றுபவர்களுக்கு மாத்திரமே சம்பள உயர்வு, பதவி உயர்வு வழங்கப்படும். அரச நிறுவன சேவைகள் மக்களுக்கு வினைத்திறனாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மறுசீரமைக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment