இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக மீட்சியடையும் - ஆசிய அபிவிருத்தி வங்கி - News View

About Us

About Us

Breaking

Thursday, April 6, 2023

இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக மீட்சியடையும் - ஆசிய அபிவிருத்தி வங்கி

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக மீட்சியடையும். கடந்த ஆண்டு 7.8 சதவீதமாகக் காணப்பட்ட பொருளாதார வீழ்ச்சி, இவ்வாண்டு 3 சதவீதமாகக் காணப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

இந்த பொருளாதார மீட்சியை அடைவதற்கு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதியான அர்ப்பணிப்பு அவசியமாகும் என சுட்டிக்காட்டியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, வெளிப்படைத்தன்மை, நிர்வாக மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை மேம்படுத்துவதும் இன்றியமையாதது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 'ஆசிய அபிவிருத்தி கண்ணோட்டம்' என்ற வெளியீட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2019 இன் வரிக் குறைப்புகளைத் மீளப் பெறுதல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித்திட்டம் குறித்து அண்மையில் எட்டப்பட்ட இணக்கப்பாடு என்பன நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு துணைபுரியும்.

நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதானது கடன் நிவாரணம் மற்றும் சீர்திருத்தங்களின் உறுதியான அமுலாக்கம் ஆகியவற்றின் முன்னேற்றத்தை சார்ந்துள்ளது.

கொவிட் தொற்றுநோய்க்கு முந்தைய பாரிய பொருளாதார பாதிப்புகள், கொள்கை ரீதியாக இழைக்கப்பட்ட தவறுகள் ஆகியவை தொற்றுநோய்க்கு முன்னதாக நாட்டை சிறியளவிலான தாக்கங்களுக்கே உட்படுத்தியது. எனினும் அவை பின்னர் இலங்கை பலவீனமடையக் கூடியவாறான நெருக்கடிக்கு வழிவகுத்தன.

கடந்த ஆண்டு அந்நிய செலாவணி தட்டுப்பாடு அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீடித்த மின் வெட்டு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் என்பன கடுமையான நெருக்கடியைத் தூண்டின.

பணவீக்கம் உயர்ந்து வாழ்க்கைத் தரத்தை சீரழித்தது. பலரை வறுமையில் தள்ளியது. பொருளாதார நெருக்கடியானது ஏழை மக்களை பாரியளவில் பாதிப்படையச் செய்துள்ளது. இலங்கை மீட்சிக்கான நீண்ட பாதையைக் கொண்டுள்ளது. மேலும் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

அத்தோடு இலங்கை உள் மற்றும் வெளிப்புற ஏற்றத்தாழ்வுகளின் மூல காரணங்களை நிவர்த்தி செய்வது கட்டாயமாகும். இதற்கு சீர்திருத்தங்களுக்கு உறுதியான அர்ப்பணிப்பு அவசியமாகும்.

உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்தல், அரச நிறுவனங்களின் நிதி சுமையை குறைப்பதற்கான செயற்திறனை மேம்படுத்துதல், பொது நிதி நிர்வாகத்தை வலுப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் மூலம் தனியார் துறை செயல்பாடுகளை ஊக்குவித்தல் ஆகியவை அத்தியாவசிய சீர்திருத்தங்களில் அடங்கும்.

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார பாதிப்பை நிவர்த்தி செய்வதற்கு ஊழலுக்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்துதல், பலமான நிறுவனங்களை கட்டியெழுப்புதல் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது போன்ற நிர்வாக மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை மேம்படுத்துவதும் இன்றியமையாததாக இருக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment