மின் கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும் - இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Friday, March 31, 2023

மின் கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும் - இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய மின் கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும், ஆகவே மின் கட்டணத்தை திருத்தம் செய்வது தொடர்பான திட்டத்தை முன்வைக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இலங்கை மின்சார சபையிடம் வலியுறுத்தியுள்ளார்.

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைக்கு அமைய மின் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. மின்பாவனையாளர்களினால் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான முறையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என மின் பாவனைகள் தொடர்பான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் சட்டத்திற்கு முரணான வகையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண அதிகரிப்பு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளேன். நீதிமன்றம் சிறந்த ஒரு தீர்மானத்தை அறிவிக்கும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் இலங்கை மின்சார சபை செயற்படுவது முறையற்றது.

எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய மின் கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும், ஆகவே மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான திட்டத்தை முன்வைக்குமாறு மின்சார சபையிடம் வலியுறுத்தியுள்ளோம். எரிபொருள் விலை குறைப்பின் பயனை மின் கட்டண திருத்தம் ஊடாக மின் பாவனையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி விலையின் வீழ்ச்சி, டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி உயர்வு ஆகிய காரணிகளை கருத்திற் கொண்டு மின் கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தியுள்ளோம். இலங்கை மின்சார சபையிடமிருந்து சிறந்த ஒரு தீர்மானத்தை எதிர்பார்க்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment