தகவல்கள் உறுதி செய்யும் திகதியை ஏப்ரல் 10 வரை நீடித்தது அரசாங்கம் : சுமார் 37 இலட்சம் படிவங்களில் இதுவரை 27,58,424 தகவல்கள் பரிசீலனை - News View

About Us

About Us

Breaking

Friday, March 31, 2023

தகவல்கள் உறுதி செய்யும் திகதியை ஏப்ரல் 10 வரை நீடித்தது அரசாங்கம் : சுமார் 37 இலட்சம் படிவங்களில் இதுவரை 27,58,424 தகவல்கள் பரிசீலனை

நலன்புரிக் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள தகுதியானவர்களினுடைய விண்ணப்பங்களின் தகவல்களை உறுதி செய்யும் கணக்கெடுப்பு நடவடிக்கையை ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நலன்புரிக் கொடுப்பனவு சபை முடிவு செய்துள்ளதாக, அச்சபையின் மேலதிக ஆணையாளர் சீனிவாசன் கிரிதரன் தெரிவித்தார்.

"உண்மையைக் கூறுவோம் - உண்மையானவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவோம்" என்னும் தொனிப்பொருளில் நலன்புரிக் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள தகுதியானவர்களை அறிந்துகொள்ளும் வேலைத்திட்டத்தின் விண்ணப்பதாரர்களின் தகவல்களை உறுதி செய்யும் கணக்கெடுப்பின் இறுதித் திகதி நேற்று 31ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு இறுதித் தினத்தை ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரை நீடிப்பதற்காக நலன்புரிக் கொடுப்பனவு சபை நேற்று முடிவு செய்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, தெரிவுக் குழு தரவுகளை உறுதிப்படுத்துவதற்கு இடமளிக்கும் வகையில் ஏனைய வீட்டு அலகுகள் அனைத்தையும் 2023 ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

கிடைக்கப் பெற்றுள்ள 37 இலட்சம் விண்ணப்பப்படிவங்களிலிருந்து இன்றையதினம் வரை 27,58,424 தகவல்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. 

இந்த இலக்கை பூர்த்தி செய்வதற்காக அனைத்து மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அவர்களது செயலணி, வீடுகளுக்கு பரிசீலனைக்கு செல்லும் அதிகாரிகள் அனைவரும் இவ்வேலைத்திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டது போன்று தொடர்ந்தும் தங்களது ஒத்துழைப்பை இறுதி வரை வழங்குவார்ளெனவும் நலன்புரிக் கொடுப்பனவு சபை எதிர்பார்க்கின்றது.

தகவல் சேகரிப்புகள் நிறைவடைந்த பின்னர், அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவிலுமுள்ள தெரிவிக்குழு கூடி பதிவு செய்யப்பட்ட தரவுகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதோடு, அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட முறைக்கமைய தெரிவு செய்யும் நிர்ணயத்தின் பேரில் புள்ளிகள் வழங்கல் கணினி மூலம் மேற்கொள்ளப்படும். 

இந்தப் புள்ளிகளை பெற்றுக் கொடுத்தல் நிறைவடைந்த பின்னர், இத்தொகுதியின் மூலம் பொருத்தமானவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்படுவதோடு, பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக அனைத்துப் பிரதேச செயலாளர் அலுவலகங்ககள் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்படுமென்றும், மேலதிக ஆணையாளர் சீனிவாசன் கிரிதரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment