(எம்.மனோசித்ரா)
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (Public Utilities Commission Of Sri Lanka), இலங்கை மின்சார சபைக்கு (Ceylon Electricity Board) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளைக் கருத்திற் கொண்டு மின் துண்டிப்புக்களை தடுக்கும் வகையில் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
331,000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெப்ரவரி 17 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட மின் வெட்டை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதிக்கவில்லை.
இந்த காலகட்டத்தில் இதுபோன்ற மின் வெட்டுகள் அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமானதாக கருதப்படும் என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் பல சந்தர்ப்பங்களில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின் வெட்டை அமுல்படுத்தாமலிருப்பதற்கு இலங்கை மின்சார சபை, மின்சக்தி அமைச்சு உள்ளிட்ட தரப்பினர் இணக்கப்பாட்டை தெரிவித்திருந்தனர்.
எவ்வாறாயினும், மின் வெட்டை அமுல்படுத்த மாட்டோம் என்று ஒப்புக் கொண்ட போதிலும் அடுத்த இரண்டு நாட்களில் பல பகுதிகளில் மின் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைகளின்போது மின் வெட்டைத் தடுக்கத் தவறியதற்காக பிரதிவாதிகளுக்கு எதிராக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment