(எம்.வை.எம்.சியாம்)
நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை பெற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் எதிர்வரும் வாரத்திற்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான நிதியை மத்திய வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு உடனடியாக மின் சக்தி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர கோரியுள்ளார்.
இது தொடர்பில் 04 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில், குறிப்பாக நிலக்கரி கொள்வனவுகள் ஒரு குறிப்பிட்ட கட்டண ஒப்பந்தத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்படுகின்றன.
கப்பலில் நிலக்கரியை ஏற்றுமதி செய்யும்போது 30 வீதம் கட்டணம் செலுத்தப்படும். கப்பலில் இருந்து தரையிறக்கும்போது அடுத்த 70 வீதம் கட்டணம் செலுத்தப்படும். ஜனவரி 30 ஆம் திகதி முதல் பெப்ரவரி 3 வரையில் 3 கப்பல்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
கப்பலொன்றுக்கு 1.35 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் இரண்டு கப்பல்களுக்கு பணம் செலுத்தப்படவில்லை.
இந்த இரண்டு கப்பல்களுக்கான கட்டணங்களும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழங்குவதாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இதுவரையில் கட்டணம் செலுத்தப்படவில்லை.
ஏனெனில் இந்த நிதித் தேவையை இலங்கை மின்சார சபை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது மேலும் எதிர்வரும் நாட்களில் மிகவும் சிக்கலான சூழ்நிலையை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.
பெப்ரவரி 4 முதல் பெப்ரவரி 10 வரை 10.74 பில்லியன் ரூபா நிதி தேவை உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தேவையான நிலக்கரி கொள்வனவிற்கான நிதி மற்றும் இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட கப்பல்களுக்கான கட்டணங்களும் சேர்த்து செலுத்தப்பட வேண்டி ஏற்பட்டுள்ளது.
எங்களுக்கு உடனடி தீர்வுகள் தேவை. ஏனெனில் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தீர்ந்து போகலாம். இந்நிலையில் 3 நிலக்கரி கப்பல்களுக்கு செலுத்துவதற்கு 12.32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment