வட பகுதி முஸ்லிம்களுக்கு முறையான வகையில் வீடமைப்புத் திட்டங்கள் வழங்கப்படவில்லை என சர்வ மதத் தலைவர்களிடம் பள்ளிவாசல் பிரதிநிதிகள் எடுத்துரைத்துள்ளார்கள்.
ஸம் ஸம் பவுண்டேஷன் மற்றும் தர்ம சக்தி அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்யும் சர்வ மதத் தலைவர்களின் வடக்கு மற்றும் தெற்கு மத நல்லிணக்க உரையாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வ மதத் தலைவர்களது வடக்கிற்கான விஜயம் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.
இச்சந்திப்பில் அமரபுர, ராமாஞ்சியம் பெளத்த பீடங்களைச் சேர்ந்த பெளத்த மதகுருக்கள், இந்து மத குருக்கள், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மெளலவிகள், கிறிஸ்தவ அருட்தந்தைகள் என சுமார் 40 பேர் கொண்ட தூதுக் குழுவினர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள பச்சைப் பள்ளிவாசலில் இடம்பெற்ற சந்திப்பிலே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டது.
இதில் கலந்து கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில், 1990 ஆண்டு முஸ்லிம்களின் வெளியேற்றம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து 2002 ஆம் தொடக்கம் மீளக்குடியமரத் தொடங்கினார்கள். இவ்வாறு மீளக்குடியமர்ந்த முஸ்லிம் குடும்பங்களுக்கு முறையான மீள் குடியேற்ற உதவிகள் கிடைக்கவில்லை.
நாம் இது தொடர்பாக மீள் குடியேற்ற அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் தெரியப்படுத்தி கலந்துரையாடியிருந்தோம். குறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியேரிடமும் கலந்துரையாடி மீள் குடியேற்றத்தை இலகுபடுத்துமாறு கோரியிருந்தோம்.
எனினும் எந்த முன்னேற்றமும் இடம்பெறவில்லை. 1990 ஆம் ஆண்டு வெளியேறியபோது 3,500 குடும்பங்களாக இருந்தோம். தற்போது 15 ஆயிரம் குடும்பங்களாக விரிவடைந்துள்ளோம். அவ்வாறாயின் எமது மீள் குடியேற்றத்திற்கு என்ன நடந்தது.
தற்போது சுமார் ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியமர்ந்துள்ள போதும் இதுவரை சுமார் 250 குடும்பங்களுக்கே வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது. அவ்வாறாயின் முஸ்லிம் மீள் குடியேற்றத்திற்கு என்ன நடந்தது. சுமார் 13 ஆண்டுகளாக இடம்பெற்ற மீள் குடியேற்றத்தில் 250 வீடுகள் வழங்கப்பட்டால் எனையவர்களுக்கு எத்தனை காலம் எடுக்கும் என்பதே எமது கேள்வியாகவுள்ளது.
எனவே தெற்கில் இருந்து எமது பிரச்சினைகளை ஆராய விஐயம் மேற்கொண்டுள்ள சர்வ மதத் தலைவர்களான நீங்கள் எமக்கு எங்களுடைய வீட்டுத் திட்டம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள். இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வழங்கி வைத்தார்கள்.
இந்த சந்திப்பில் யாழ் மாநகர சபை உறுப்பினர் நிலாம், பச்சைப் பள்ளிவாசல் மௌலவி, பச்சை பள்ளிவாசல் தலைவர் எம்.மூபின், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் ஆர்.கே. சுவர்கான் மற்றும் சமூக செயல்பாட்டாளர் அம்ஐத்கான், பள்ளி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்துவதன் மூலம் நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்பும் பயணத்தில் ஸம் ஸம் நிறுவனம் மற்றும் தர்மசக்தி அமைப்பும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment