ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் - யோகராஜன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 7, 2023

ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் - யோகராஜன்

(எம்.வை.எம்.சியாம்)

நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினருமான ஆர். யோகராஜன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து இ.தொ.கா. பயணிப்பது தொடர்பான அறிவிப்பினை தெரியப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டில் இன்றையதினம் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன், இ.தொ.கா இணைந்து பயணித்துள்ளது. எதிர்வரும் தேர்தலில் மலையகத்தில் 6 தேர்தல்கள் தொகுதிகளில் இணைந்தும், ஏனைய பகுதிகளிலும் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் இ.தொ.கா.வின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

மேலும் இந்த தேர்தலில் பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சிலரும் எம்முடன் இணைந்து போட்டியிடுகிறார்கள்.

மேலும் கொழும்பு மாநகர சபை என்பது ஐக்கிய தேசிய கட்சிக்கு சொந்தமானது. கொழும்பு தேர்தல் தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக காணப்படுகிறது. இந்நிலையில் இந்த கோட்டையின் அதிகாரத்தை மீளவும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு நாம் தற்பொழுது இணைந்துள்ளோம்.

2004ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இ.தொ.கா இணைந்து செயற்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசிய கட்சியை வெற்றி பெறச் செய்வதன் மூலம் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி அதிகாரத்தை மேலும் பலப்படுத்த முடியும்.

நாட்டின் எல்லா சமூகத்தினரும் இன ஒற்றுமையுடன் ஒன்றாக, ஒரு தாய் பிள்ளைகள் போல வாழ வேண்டும் என்ற எண்ணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் காணப்படுகிறது. அவரது கனவை நனவாக்க வேண்டும் என்றால் அவருக்கு நாம் பூரண ஆதரவை வழங்க வேண்டும்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைக்கப் பெறவும், அரசாங்கத்தின் கட்சிகள் மற்றும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கக் கூடியவர்கள் கட்டாயம் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

அதற்கு ஏதாவது தடங்கல் ஏற்பட்டு சர்வதேச நாடுகளுடைய உதவிகள் கிடைக்கப் பெறாமல் போனால், நாட்டுக்கு பாரியதொரு இழப்பு ஏற்படும் என்பதை மனதில் கொண்டு எல்லோரும் செயல்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment