இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்ய பிடியாணை அவசியமில்லை - News View

About Us

About Us

Breaking

Thursday, February 9, 2023

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்ய பிடியாணை அவசியமில்லை

குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குற்றமிழைத்திருந்தால், அவரை கைது செய்ய நீதிமன்றிடம் பிடியாணை கோர அவசியமில்லை என கொழும்பு பிரதான நீதவான் அறிவித்துள்ளார்.

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிரான மனு இன்று (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் அறிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மோசடியாக கடவுச்சீட்டை பெற்றுள்ளதாகவும், அவரது பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (09) எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் குறித்த விடயத்தை அறிவித்தார்.

நீதிமன்றினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, மேற்கொண்ட விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி, சிவில் செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத்தினால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, அவர் பிரித்தானிய குடியுரிமையை கொண்டுள்ளதாகவும் அரசியலமைப்புக்கு அமைய, அவர் இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரப்பட்டுள்ள வழக்கில், ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அமைச்சர் டயானா கமகேவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பெப்ரவரி 17ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

குறித்த மனு கடந்த ஜனவரி 26ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment