பத்தரமுல்லை, தலங்கம, பெலவத்த பகுதியில் அதிசொகுசு மாடி வீட்டில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திலிருந்து, மர்மமான முறையில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகரின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களான தம்பதிகளை பொலிஸார் இன்று (05) கைது செய்துள்ளனர்.
23 மற்றும் 27 வயதுடைய கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெளிநாடு செல்ல முயற்சித்ததாகவும் குறித்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
வர்த்தகரின் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த கணவனும், மனைவியும் கடவத்தையில் உள்ள பிரபல சந்தைக்கு முன்பாக கைது செய்யப்பட்டதாக கந்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் காமினி ஹேவாவிதாரண தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் கொத்தடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
SHADES எனும் ஆடையகத்தின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர் ரொஷான் வன்னிநாயக்க (50) 30ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் அவரது பெலவத்தை எம்.டி.எச். வீதியில் உள்ள சொகுசு வீட்டின் 2ஆவது மாடியில் உள்ள நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டிருந்த வேளையில் சடலமாக 02ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டார்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் தொழிலதிபரை கொன்ற பின்னர், அவருடைய கார் மற்றும் கையடக்கத் தொலைபேசியை எடுத்துச் சென்றதுடன், மூன்றாம் நாள் கார் நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் உட்பட பல குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வரும் வேளையில், கந்தானை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் காமினி வழங்கிய இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment