(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரை புதன்கிழமை (08) ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் கொள்கைப் பிரகடன உரை புறக்கணிப்பில் எதிர்கட்சிகளிடையில் பிளவுகள் ஏற்பட்டிருந்தன.
எதிர்த்தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர், சுதந்திர கட்சியின் இரு உறுப்பினர்கள், தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் அரசியல் கட்சிகள் உள்ளடங்களாக 15 இற்கும் குறைவான உறுப்பினர்கள் மாத்திரமே அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையில் கலந்து கொண்டிருந்தனர்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடரை புதன்கிழமை (8) காலை 10 மணிக்கு ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் அடுத்த 25 வருடங்களுக்கான அரசின் கொள்கை தொடர்பில் 55 நிமிடங்கள் உரையாற்றினார்.
விமல், டலஸ் அணியினர் எதிர்ப்புடன் புறக்கணிப்பு
9 ஆவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்ற ஜனாதிபதி சபைக்கு வருவதற்கு முன்னர் சபைக்குள் வந்த சுயாதீன எதிரணி உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான அணியினர் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில், ஜனாதிபதி சபைக்குள் வந்து அக்கிராசனத்தில் அமர சென்றபோது ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையை புறக்கணிப்பதாக கோஷமிட்ட இந்த அணியினர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இவர்கள் கோஷமிட்டபோது பதிலுக்கு இவர்களுக்கு எதிராக அரச தரப்பினரும் கூச்சலிட்டனர்.
பங்கேற்ற, புறக்கணித்த தமிழ் கட்சிகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா. சாணக்கியன், த.கலையரசன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உறுப்பினர் த .சித்தார்த்தன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் சபை அமர்வில் பங்கேற்ற நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி.க்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் ஜனாதிபதியின் உரையை புறக்கணித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சிகள் பங்கேற்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடன உரையை புறக்கணிப்பதாக சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்ததுடன் சபை அமர்விலும் பங்கேற்காத போதும் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் சபை அமர்வில் பங்கேற்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரையில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமைத் தவிர ஏனைய உறுப்பினர்களான ஹரிஸ், பைசல் ஹாசிம், தௌபீக் ஆகியோர் பங்கேற்றனர். அதேபோன்று தமிழ் முற்போக்கு கூட்டணியில் திகாம்பரம், இராதாகிருஷ்ணன், உதயகுமார் ஆகியோர் பங்கேற்ற நிலையில் ஜனாதிபதியின் உரை ஆரம்பித்து 15 நிமிடங்களின் பின்னர் அதன் தலைவரான மனோ கணேசனும் சபை அமர்வில் பங்கேற்றார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆரம்பம் முதலே சபையில் அமர்ந்திருந்தார்.
சுதந்திரக் கட்சியிலும் பிளவு
இதேபோன்று 9 ஆவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்ற ஜனாதிபதி சபைக்கு வருவதற்கு முன்னர் சபைக்குள் வந்து அமர்ந்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பின்னர் வெளிநடப்பு செய்தபோதும் அதன் உறுப்பினர்களான துமிந்த திசாநாயக்க, ஜோன் செனவிரத்ன, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தொடர்ந்தும் சபை அமர்வில் பங்கேற்றனர்.
ஜே .வி.பி . புறக்கணிப்பு
இதேவேளை எதிர்கட்சிகளில் ஒன்றான அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.யும் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையை புறக்கணித்தது. அக்கட்சியிலிருந்து எவருமே சபைக்கு வரவில்லை.
No comments:
Post a Comment