கம்பளை, தொலுவ பிரதான வீதியில் தலதா மாளிகையின் புராதன சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட வணக்கஸ்தலத்துக்கு அருகில் மதுபானசாலை திறந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை உடனடியாக அகற்றக்கோரி வலியுறுத்தியும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னடுக்கப்பட்டது.
14 விகாரைகளின் விகாராதிபதிகளும், 8 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் இணைந்து இப்பாரிய ஆர்ப்பாட்டத்தை இன்று (8) மேற்கொண்டனர்.
புராதன காலத்தில் கண்டிக்கு வெளிநாட்டு சக்திகளின் படையெடுப்பின்போது அங்கிருந்த புனிதச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டதாக கூறப்படும் கம்பளை தொலுவ பிரதான வீதியில் உள்ள மெகொட கலுகமுவயில் அமைந்துள்ள விகாரைக்கு 50 மீற்றர் தூரத்திலேயே மேற்படி மதுபானசாலை கடந்த 2ஆம் திகதி திடீரென திறக்கப்பட்டதாக தெரியவருகிறது.
இதன்போது அங்கு கருத்து தெரிவித்த உடபளாத்த பிரதி சங்கநாயக தேரர், இந்த மதுபானசாலை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தொலுவ பிரதேச செயலாளர், பிரதேச அரசியல்வாதிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அறிவித்துள்ளோம்.
அவர்கள் எங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லையெனில், எதிர்வரும் 15ஆம் திகதி பிரதேசவாசிகளுடன் கனேகொட ஸ்ரீ கந்த சுவாமி ஆலயத்தில் விசேட பூஜைகளை நடத்தி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தண்டனை கொடுக்குமாறு பிரார்த்தனை செய்யப் போகின்றோம் என்றார்.
அதனைத் தொடர்ந்து தொலுவ இங்குறுவத்தை' கல்பீகொடவெல', கனேகொட'கலுகமுவ' கல் ஓய' வடகொட 'வாரியகல' போன்ற விகாரைகளின் விகாராதிபதிகள் உட்பட அதனை சூழவுள்ள கிராமத்தவர்களுமே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment