(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றக் கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், அக்கிராசன உரையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 27 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஒத்தி வைக்கப்பட்டது. அதற்கமைய நாளை புதன்கிழமை ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இவ்வாறு ஜனாதிபதியால் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டமை தொடர்பில் பல தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை பாராளுமன்றத்தில் ஆற்றவுள்ள அக்கிராசன உரையின்போது, தேர்தலைக் காலம் தாழ்த்துவது தொடர்பான யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள இறுதி முயற்சியையும் அனைவரும் இணைந்து தோல்வியடைச் செய்ய வேண்டும். சுதந்திர கட்சி இதில் முன்னின்று செயற்படும் என்றார்.
No comments:
Post a Comment