தான் இறந்து விட்டதாக காட்டிக் கொள்வதற்காக, தன்னைப் போன்ற முகத்தோற்றம் கொண்ட யுவதியை கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் யுவதியொருவரை ஜேர்மனிய பொலிஸார் கைது செய்தள்ளனர்.
ஜேர்மன் - ஈராக்கியரான 23 வயது யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 23 வயதான அல்ஜீரிய யுவதியை கொலை செய்தார் என ஜேரமனிய பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இக்கொலை தொடர்பில் 23 வயதான கொசோவோ இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி ஜேர்மன் - ஈராக்கிய யுவதியை கடந்த வருடம் ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் காணவில்லை என அவரின் பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர்.
பின்னர் அவரின் கார் கண்டு பிடிக்கப்பட்டது. அதற்குள் பெண்ணொருவரின் சடலமும் காணப்பட்டது. பல தடவை கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு அப்பெண் கொல்லப்பட்டிருந்தார். அவரின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது.
அச்சடலம் காணாமல் போன யுவதியினுடையது என அவரின் பெற்றோரும் பொலிஸாரும் அடையாளம் கண்டனர். ஆனால், உயிரிழந்தவர், காணாமல் போனதாக கூறப்பட்ட யுவதியைப் போன்ற தோற்றம் கொண்ட அல்ஜீரிய யுவதி என பின்னர் தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார், கொசோவோ இளைஞனின் வீட்டில் வைத்து மேற்படி ஜேர்மன் - ஈராக்கிய யுவதியை கைது செய்தனர்.
குடும்பப் பிரச்சினைகள் காரணமாக தலைமறைவாக இருப்பதற்கு அந்த யுவதி முயற்சித்தார் என விசாரணையாளர்கள் கருதுகின்றனர் என ஜேர்மன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களான இளைஞனும், யுவதியும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment