மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி இன்றுடன் இரண்டு வருடங்கள் : ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 1, 2023

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி இன்றுடன் இரண்டு வருடங்கள் : ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு

மியன்மாரில் இராணுவம் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றி இன்றுடன் இரண்டு வருடங்களாகின்ற நிலையில் நாடளாவிய ரீதியில் வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் எதிர்ப்பை வெளியிட வேண்டும் என சிவில் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் தாங்கள் அவசரகாலநிலையை அதிகரிக்கலாம் தேர்தல்களை பிற்போடலாம் என தெரிவித்துள்ளனர்.

மியன்மார் இராணுவத்தினர் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி ஆட்சியை கைப்பற்றியதுடன் ஆன்சான் சூகி தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டார் என்ற நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமது நடவடிக்கையை நியாயப்படுத்தினர்.

மியன்மாரில் இராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றி இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற இன்றைய நாளை இலக்கு வைத்து மேற்குலக நாடுகள் புதிய தடைகளை விதித்துள்ளன. எனினும் இவ்வாறான தடைகள் பயனற்றவையாக காணப்படுகின்றன. இந்த தடைகளால் இராணுவத்தினரை அதிகாரத்திலிருந்து அகற்ற முடியவில்லை.

இன்றைய தினத்தை குறிக்கும் விதத்தில் யங்கூனில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்களை புரட்சியில் கலந்துகொள்ளுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொதுமக்களை வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு வீதி இறங்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை இராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறவுள்ளன.

இன்றையதினம் காரணமாக மியன்மாரின் தலைநகரில் இராணுவ ஆட்சியாளர்களிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகள் அதிகரிக்கலாம் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்த அவசரகாலநிலை ஜனவரியுடன் முடிவடையவுள்ளது. இதன் பின்னர் அரசமைப்பின்படி தேர்தலிற்கான நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்.

இன்று தேர்தல் குறித்த அறிவிப்பை இராணுவத்தினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இராணுவ ஆட்சியாளர்களை உள்ளடக்கிய தேசிய பாதுகாப்பு பேரவை இயல்பு நிலை இன்னமும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.

ஆன்சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்கும் நிழல் அரசாங்கமும் மக்கள் பாதுகாப்பு படையினரும் வன்முறை அமைதியின்மை மூலம் ஆட்சியை கைப்பற்ற முயல்கின்றனர் என இராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களையும் அவர்களிற்கு ஆதரவானவர்களையும் இலக்கு வைத்து அமெரிக்கா கனடா பிரிட்டன் ஆகிய நாடுகள் புதிய தடைகளை அறிவித்துள்ளன.

மியன்மார் இராணுவத்தின் விமானங்களிற்கு எரிபொருட்களை வழங்குவதன் மூலம் அதன் விமானதாக்குதலிற்கு உதவும் நிறுவனங்களிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளது. அவுஸ்திரேலிய அமெரிக்கா ஆகிய நாடுகளும் தடைகளை விதித்துள்ளன.

No comments:

Post a Comment