வரி அதிகரிப்பு பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் : நாட்டில் இனி போராட்டங்கள் தீவிரமடையும் என்கிறார் நாலக கொடஹேவா - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 7, 2023

வரி அதிகரிப்பு பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் : நாட்டில் இனி போராட்டங்கள் தீவிரமடையும் என்கிறார் நாலக கொடஹேவா

(இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்காது. அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் பொருளாதார வளர்ச்சி வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. வரி அதிகரிப்பு பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, மொத்த தேசிய வருமானம் 8.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தில் அறிமுகப்படுத்திய தவறான பொருத்தமற்ற பொருளாதார கொள்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்படுத்துகிறார். பொருளாதார நெருக்கடி சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும்.

அரசாங்கத்தின் தவறான வரிக் கொள்கையினால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வரி வீதம் 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளது.

வரி அதிகரிப்பினால் தேசிய வருமானத்தை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும் என்ற ஜனாதிபதியின் பொருளாதார கொள்கை முற்றிலும் தவறானது.

நாட்டு மக்களை பொருளாதார ரீதியில் முழுமையாக நெருக்கடிக்குள்ளாக்கி பொருளாதார பாதிப்பில் இருந்து மீள முடியாது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏதாவதொரு வழிமுறையில் நிவாரணம் வழங்காமல் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையை மேம்படுத்த முடியாது.

பொருளாதார பாதிப்பினாலும், அரசாங்கத்தின் புதிய வரி திருத்தங்களினாலும் புத்திசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அறிவார்ந்த தொழிற்துறையினர் நாட்டை விட்டு வெளியேறுவது பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்துமே தவிர பொருளாதாரத்தை ஒருபோதும் மேம்படுத்தாது.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்ள அரசாங்கம் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

வரி அதிகரிப்புக்கு எதிராக நாட்டில் இனி போராட்டங்கள் தீவிரமடையும். நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்வரும் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

சீனாவின் உத்தரவாதம் போதுமானதல்ல என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதால் கடன் மறுசீரமைப்பு விவகாரம் தொடர்ந்து தாமதமடையும் என்றார்.

No comments:

Post a Comment