தேர்தலை நடத்தினால் சம்பளம் வழங்குவது தாமதமாகும் : நிதி இராஜாங்க அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Monday, February 6, 2023

தேர்தலை நடத்தினால் சம்பளம் வழங்குவது தாமதமாகும் : நிதி இராஜாங்க அமைச்சர்

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்கல், நலன்புரி சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு தாமதமாகும். பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை அடுத்த மாதம் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள அரசாங்கம் பல விடயங்களில் மறுசீரமைப்புக்களை முன்னெடுத்துள்ளது.

நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில்தான் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்திற்குள் வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது.

வரி அதிகரிப்பினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நடுத்தர மக்களுக்கு இயலுமான அளவு நிவாரணம் வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சமூக பாதுகாப்பு அறவீட்டுத் தொகை உள்ளிட்ட புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரி கொள்கைகளை இயலுமான அளவு மட்டுப்படுத்த பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துமாறு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியல் காரணிகளுக்கு முக்கியத்துவம் செலுத்த முடியாது என்பதை அரசியல் தரப்பினர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்கல், நலன்புரி சேவைகளுக்காக நிதி ஒதுக்கீடு ஆகிய முக்கிய பணிகள் தாமதமாகும். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுவதால் அரசாங்கம் ஒன்றும் மாற்றமடையப் போவதில்லை.

அரசியலமைப்பின் பிரகாரம் காலத்திற்கு காலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் மறுக்கவில்லை.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் அது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அரசாங்கம் என்ற ரீதியில் அவதானத்துடன் செயற்பட வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு என்றார்.

No comments:

Post a Comment