மீட்புப் பணிகளுக்கு 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழு தயார் நிலையில் : சுனாமி அனர்த்தத்தின் போதான துருக்கியின் உதவியை ஞாபகமூட்டினார் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 7, 2023

மீட்புப் பணிகளுக்கு 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழு தயார் நிலையில் : சுனாமி அனர்த்தத்தின் போதான துருக்கியின் உதவியை ஞாபகமூட்டினார் அலி சப்ரி

துருக்கியின் தெற்கு பகுதியில் நேற்று திங்கட்கிழமை (06) அதிகாலை இடம்பெற்ற நில நடுக்கங்கள் காரணமான அனர்த்தம் தொடர்பிலான மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக 300 இராணுவ வீரர்களைக் கொண்ட இலங்கை இராணுவம் தயார் நிலையில் உள்ளதாக, இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த குழுவில் பொறியியல் மற்றும் மருத்துவப் படையைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் ஏற்பட்ட தொடர் நில நடுக்கங்களால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் பேரழிவுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிர்ச்சியடைவதாகவும், இது தொடர்பில் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் சார்பாக, துருக்கிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும், குறிப்பாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதோடு, துருக்கி மக்களுடன் இலங்கை ஒன்றிணைந்து நிற்கும் எனவும் மீட்பு பணிகளுக்காக இராணுவ வீரர்கள் குழு மூலம் உதவ தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அனர்த்தம் தொடர்பில் உதவிகளை வழங்கத் இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ள, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், துருக்கி வெளிவிவகார அமைச்சரைத் தொடர்பு கொண்டு, தேடுதல் மற்றும் மீட்புக்கான உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுவேளை, 2004 இல் சுனாமி இலங்கையைத் தாக்கியபோது, துருக்கியே உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கியது என்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு வீட்டுத் தொகுதியைக் கட்டிக் கொடுத்து என்பதையும் நினைவூட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

துருக்கியின் தெற்கு பகுதியில் கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் காசியான்டெப்பின் வடக்கில் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம், லெபனான், ஜோர்டான், இஸ்ரேல், எகிப்து உள்ளிட்ட நாடுகளாலும் உணரப்பட்டிருந்தது.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தின் இறப்பு எண்ணிக்கை 15,000 இனை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், 20,000 இற்கும் அதிகமானோர் இறந்திருக்கலாமென அஞ்சப்படுகின்றது.

1939 இற்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பேரழிவு இதுவென, துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment