167 நாட்களின் பின் சிறையிலிருந்து வெளியேறினார் வசந்த முதலிகே - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 1, 2023

167 நாட்களின் பின் சிறையிலிருந்து வெளியேறினார் வசந்த முதலிகே

றிஸ்வான் சேகு முஹைதீன்

அனைத்துப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளிலிருந்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இன்று (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த 3 வழக்குகள் தொடர்பில் நகர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விளக்கமளிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, அவர் மிக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மற்றும் நேற்றையதினம் (31) பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழான கைது தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் நீதிமன்றிற்கு விளக்கமளிக்கப்பட்டதாக, சட்டத்தரணி நுவன் போபகே குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலைக்கு இது தொடர்பில் அறிவித்து, வசந்த முதலிகே நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டு பிணையில் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்கில் இருந்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே நேற்று (31) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (31) இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆயினும் மேற்படி வழக்குகள் தொடர்பில் அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

வசந்த முதலிகே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கடந்த வருடம் ஓகஸ்ட் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, நவம்பர் 21 முதல் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அதற்கமைய அவர் கைதாகி இதுவரை 5 மாதங்களுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment