எரிக்கப்பட்ட 13 ஆம் அரசியலமைப்பு திருத்தச் சட்டம் : கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 7, 2023

எரிக்கப்பட்ட 13 ஆம் அரசியலமைப்பு திருத்தச் சட்டம் : கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள போராட்டம்

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை எதிர்த்து கொழும்பில் பௌத்த தேரர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தால் பதற்றநிலை மேலும் அதிகரித்துள்ளது.

அதேசமயம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் சிலர் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் பிரதியொன்றை தீயிட்டு கொளுத்தியிருந்தனர்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தெரிவிக்கப்பட்டமைக்கு  எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை கொழும்பில் பௌத்த பிக்குகளால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பௌத்த தேரர்களால் 13 ஆவது திருத்தத்தின் பிரதியொன்றும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது.

கடந்த ஜனவரி 26ஆம் திகதி இடம்பெற்ற சர்வ கட்சி மாநாட்டின் போது 'தனிப்பட்ட பிரேரணையூடாக 13 ஐ நீக்க முடியும். அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் 13 ஐ நடைமுறைப்படுத்த நேரிடும். ஆனால் இதனால் நாடு பிளவுபடாது. ' என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். 

அத்தோடு கடந்த 4ஆம் திகதி இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு அற்றிய விசேட உரையின் போதும் ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகார பகிர்வு வழங்கப்படும் என்றும், எனினும் நாடு பிளவுபட ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும்' குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே பௌத்த பிக்குகளால் இன்று (08) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுற கோட்டை பேரகும்பா பிரிவெனாவில் விசேட சங்க மாநாடொன்றும் இடம்பெற்றது. 

அங்கு ஒன்று திரண்ட பௌத்த பிக்குகள் பாராளுமன்ற வீதியின் ஊடாக பொல்துவ சந்தியைச் சென்றடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொல்துவ சந்தியிலிருந்து பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு நுழைய முயற்சித்தனர். இதனை பொலிஸார் தடுக்க முற்பட்டபோது அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.

அமைதியான போராட்டத்தில் ஈடுபடுவதாக பௌத்த பிக்குகள் அறிவித்திருந்த போதிலும், குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு இடையூறு விளைக்கும் வகையில் அவர்களை அச்சுறுத்தல் அத்துமீறிச் செல்ல முற்பட்டமையின் காரணமாகவே அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது. 

பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதிகளில் நுழைவதற்கு கொழும்பு மேலதிக நீதவான் தடை விதித்திருந்ததன் பின்னணியிலேயே அவர்கள் இவ்வாறு அத்துமீறிச் செல்ல முயற்சித்தனர். எவ்வாறிருப்பினும் இவர்களை பாராளுமன்ற சுற்று வட்டத்திற்குள் செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை.

இதன் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் பொல்துவ சந்தியில் வீதியில் அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக குறித்த பகுதியின் ஊடாக போக்குவரத்துக்கள் ஓரிரு மணித்தியாலங்கள் முற்றாக முடங்கின. இதனால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களையும் எதிர்நோக்கினர். 
அத்தோடு இதன்போது மஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி தம்மரத்ன தேரரினால் 13ஆவது அரசியலமைப்பின் பிரதியொன்று தீயிட்டு கொளுத்தப்பட்டது. 'இனியொரு போதும் இதனை நடைமுறைப்படுத்த முடியாது.' என்று கோஷமெழுப்பியவாறு அவர் அந்த பிரதியை எரித்தார்.

இதேவேளை, பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் ஊழலுக்கு எதிரான அமைப்பின் காமந்த துஷார என்ற நபர் ஆகியோர் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அவ்விடத்திலிருந்து செல்லுமாறு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமையினால் பின்னர் பொலிஸ் பொறுப்பிலெடுக்கப்பட்டனர்.

மேலும் 13ஆம் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வு பெற்ற அங்கவீனமுற்ற இராணுவத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஓய்வு பெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜகிரிய - ஜயநேகராமயவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment