(இராஜதுரை ஹஷான்)
அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. அரசாங்கம் தேர்தலை கண்டு அச்சமடையும் போது எவ்வாறு அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அரசியல் நெருக்கடி தீவிரமடைந்து நாட்டில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது.
நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தீவிரமடையும் சூழல் காணப்படுவதை பல்வேறு காரணிகள் ஊடாக அவதானிக்க முடிகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல், சர்வதேச நாணய நிதியம் மற்றும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் ஆகிய விடயங்கள் பிரதான பேசு பொருளாக காணப்படுகின்றன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளபோதும், தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கிறது.
அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. தேர்தல் ஊடாகவே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. இந்த அரசாங்கம் தேர்தலுக்கு பயந்து ஓடுகின்ற நிலையில் எவ்வாறு அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்ட கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
13ஆவது திருத்தம் தொடர்பில் வெளித் தரப்பினரது கருத்துக்களை கோர முன்னர் பிரதமரிடமும், பொதுஜன பெரமுனவிடமும் நிலைப்பாட்டை கோர வேண்டும்.1989ஆம் ஆண்டு இன ரீதியான முரண்பாடுகள் பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிப்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment