(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ள போதிலும், இது தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படவில்லை. 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு (31) நடைபெற்ற போது 13ஆவது திருத்தம் தொடர்பில் கேட்கப்பட்டபோது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அமைச்சரவையில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை. எனினும் எந்தவொரு விடயம் தொடர்பிலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்கும். ஆனால் நீதிமன்றம் இதுவரையில் அவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிடவில்லை.
அரசியலமைப்பு திருத்தத்துடன் தொடர்புடைய விடயங்கள் நாட்டிலுள்ள பொதுமக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் அறியாமல் முன்னெடுக்கப்படுவதில்லை. இவை தொடர்பான இறுதித் தீர்மானம் அமைச்சரவையிலேயே முன்னெடுக்கப்படும். எனினும் அவ்வாறான எந்தவொரு அறிவித்தலும் அமைச்சரவைக்கு விடுக்கப்படவில்லை என்றார்.
'13ஆவது அரசியல் திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும். நான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் 22ஆவது திருத்தத்தினை எவரேனும் சமர்ப்பித்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும். 13 ஆல் நாடு பிளவுபடாது.
விசேடமாக 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்துக்கமைய நாம் ஒற்றையாட்சியில் இருக்கிறோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான் உடன்படுகின்றேன்.' என்று கடந்த வாரம் இடம்பெற்ற சர்வ கட்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
இதேவேளை நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மாகாண சபைத் தேர்தல்கள் விரைவாக நடாத்தப்பட வேண்டியது அவசியம் என்ற எமது நிலைப்பாடு குறித்து ஜனாதிபதியிடம் பகிர்ந்துகொண்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment