(எம்.மனோசித்ரா)
தனிப்பட்ட காரணங்களுக்காக வருமான வரி அதிகரிக்கப்படவில்லை. எவ்வாறிருப்பினும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினர் தொடர்பிலும் சிந்தித்து ஏதேனுமொரு வகையில் வரிச் சலுகையை வழங்க முடியுமா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தபோது காணப்பட்ட நிலைமையை விட, தற்போது சாதகமான நிலைமையே காணப்படுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் நேர்மறை பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதே எமது இலக்காகும். தற்போது நாட்டின் பொருளாதாரம் 10 சதவீதம் எதிர்மறையாகவே காணப்படுகிறது. இவ்வாண்டியின் இறுதியில் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படக் கூடும் என்று மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
வரிச் சலுகை வழங்கப்பட்டமையின் காரணமாக 2019 - 2020 காலப்பகுதியில் மாத்திரம் அரசாங்கத்தின் வருமானம் 75 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. வருமானத்தை விட செலவு 300 சதவீதம் அதிகமாகவுள்ளது. இதனால் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள வருமான வரியில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இது எவருடையதும் தனிப்பட்ட தேவைகளுக்கான எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதிலும், கடன் மறுசீரமைப்பு சவாலுக்குரியதாகவே காணப்படுகிறது. நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது மாத்திரமே ஒரேயொரு வழியாகும்.
கடனை மீளச் செலுத்த முடியும் என்பதற்கு அரச வருமானம் அதிகரித்துள்ளது என்பதைக் காண்பிக்க வேண்டும். அதன் காரணமாகவே வருமான வரி உள்ளிட்ட ஏனைய வரிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் இதில் ஏதேனுமொரு வகையில் சலுகைகளை வழங்க முடியுமா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.
தேர்தலுக்கான செலவுகள் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் தற்போதுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய செலவுகளுக்கு மாத்திரமே முன்னுரிமையளிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் உண்மையான நிதி நிலைவரம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தபோது காணப்பட்ட நிலைமையை விட, தற்போது சாதகமான நிலைமையே காணப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment