எரிபொருள் பெற்றுத் தருவதாக 20 இலட்சத்தை அபகரிக்க முயன்றவர்கள் மடக்கிப் பிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 31, 2023

எரிபொருள் பெற்றுத் தருவதாக 20 இலட்சத்தை அபகரிக்க முயன்றவர்கள் மடக்கிப் பிடிப்பு

றிஸ்வான் சேகு முஹைதீன்

வவுனியா, மதவாச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வர்த்தகர் ஒருவரைத் தொடர்பு கொண்டு எண்ணெய் மற்றும் டீசல் பெற்றுத் தருவதாக கூறி ரூ. 20 இலட்சம் பணத்தை அபகரித்துச் செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (30) இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற 32 வயதான, இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் குறித்த பணத்துடன் பொலிஸாரால் விரட்டிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

தாம் கடற்படை கெப்டன் என போலியாக தெரிவித்து, வர்த்தகர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து தாம் பூனேவ கடற்படை முகாமில் மசகு எண்ணெய் (ஒயில்) மற்றும் டீசலை விலை மனு முறையில் வழங்குவதாக தெரிவித்து ரூ. 22 இலட்சம் பெறுமதியான 20 டீசல் மற்றும் ஒயில் பெரல்களை ரூ. 20 இலட்சத்திற்கு வழங்குவதாக பணத்தை கோரியுள்ளனர். இன்றைய தினமே இதனை வழங்க முடியுமெனவும், பூனேவ கடற்படை முகாமிற்கு அருகில் தம்மை சந்திக்குமாறு வர்த்தகருக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த வர்த்தகர் கடற்படை முகாமுக்கு அருகில் வந்தபோது குறித்த சந்தேகநபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் அங்கு வந்திருந்த நிலையில், தங்களை கடற்படை அதிகாரிகள் போல அறிமுகப்படுத்திக் கொண்ட சந்தேகநபர்கள், வர்த்தகரினதும் அவருடன் வந்த லொறியின் சாரதியையும் முகாமிற்குள் செல்ல அனுமதி பெறுவதற்காக தேசிய அடையாள அட்டைகளை வழங்குமாறு தெரிவித்து, அதனை பெற்றுக் கொண்டு குறித்த முகாமின் பிரதான வாயில் அருகே சென்று திரும்பியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கடற்படை முகாமிற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, குறித்த வர்த்தகரிடமிருந்த ரூ. 2 மில்லியன் பணத்தை, கடற்படை கெப்டன் போல் நடித்த பிரதான சந்தேகநபர் பெற்றுக் கொண்டு, அவர்களைள லொறியில் பின் தொடருமாறு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பணத்தை பெற்றுக் கொண்ட சந்தேகநபர்கள் லொறியை திருப்ப முயன்ற வேளையில், அவர்கள் பூனேவ நகரத்தை நோக்கி வேறு திசையில் வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்ல முயன்றுள்ளனர். இதன்போது சந்தேகம் ஏற்பட்ட வர்த்தகர் சந்தேகநபர்களை லொறியில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

குறித்த வேளையில் கடமையிலிருந்த கெபித்திகொல்லேவ பிரிவின் பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜென்ட், சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளார். ஆயினும் அதனை பொருட்படுத்தாமல் சென்ற நிலையில், அவருடன் நின்றிருந்த பொலிஸ் அதிகாரியுடன் குறித்த சந்தேகநபர்களை விரட்டிச் சென்றுள்ளதோடு, இது தொடர்பில் மதவாச்சி பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையிலிருந்த அதிவேக மோட்டார் சைக்கிள் பிரிவு அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு காத்திருந்த பொலிஸாரின் சமிக்ஜையை மீறிச் சென்ற சந்தேகநபர்களை அவ்வதிகாரிகளும் இணைந்து விரட்டி, இங்கிரிகொல்ல பாடசாலைக்கு அருகில் வைத்து குறித்த ரூ. 20 இலட்சம் பணத்துடன் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மதவாச்சி மற்றும் பூனேவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு சிறப்பாக பணியாற்றியமை மூலம் குறித்த குற்றத்தை ஒரு சிறிய நேரத்திற்குள் முறியடிக்க முடிந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment