(எம்.வை.எம்.சியாம்)
1987 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட 37,000 பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்ட ரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தினரால் திங்கட்கிழமை (03) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்ட ரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தினரால் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டக்காரர்களால் தோட்ட தொழிலாளர் இந்த நாட்டின் பிரஜைகள் என்றும் அவர்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும், எமது நில உரிமையை உடனடியாக பெற்று தாருங்கள், பழமையான வீட்டு வாழ்க்கை போதும் போன்ற எதிர்ப்பு பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டகாரர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் 1987 ஆம் ஆண்டின் பின்னர் பெருந்தோட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு வீட்டுரிமைப் பத்திரங்களை வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜர் ஒன்றில் கையொப்பங்கள் திரட்டுவதற்கு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் இது தொடர்பில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பெ.முத்துலிங்கம் கருத்து தெரிவிக்கையில், இன்று உலக வாழ்விட தினம். தமக்கான வீடுகளுக்கான உறுதிப்பத்திரத்தை வழங்க வேண்டும் என்று கூறி மலையக தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெத்திருகிறார்கள்.
மேலும் கடந்த 200 வருடங்களுக்கும் மேலாக மலையக மக்கள் இன்னமும் லயன் வீட்டு தொகுதிகளில் நான்கு, ஐந்து தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். பிரித்தானியர் காலத்தில் அன்று சுமார் 169,000 ஆயிரம் லயன் வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டது. இன்றும் 150 வருடங்கள் கடந்து அதே மலையக மக்கள் லயன் குடியிருப்புகளில் வாழ்கிறார்கள்.
கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்தவர்களில் 1987 ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் 37,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் அவர்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு எமது மக்கள் கடனை செலுத்தி இருக்கிறார்கள்.
இருப்பினும் இந்நிலையில் அவர்களுக்கான குறித்த காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை. மாறாக இடைக்கிடையே சில தற்காலிக உறுதிப்பத்திரங்களை வழங்கியிருந்நதாலும் அவை நாட்டினுடைய சட்டத்தின் பிரகாரம் அவை இலங்கை அளவையாளர் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த 20 வருடங்களாக நில உரிமையாளர்கள் கடனை செலுத்தி வந்திருந்த போதிலும் அதற்கான சட்ட ரீதியான உறுதிப்பத்திரம் வழங்கவில்லை. நாட்டின் அபிவிருத்திக்காகவும், அந்நிய செலவாணிக்கு பாரியளவில் பங்களிப்பு வழங்கும் மக்கள் அவர்களாவார்.
இன்னும் அவர்களுக்கு முறையான வீட்டுத் திட்டங்கள், அல்லது காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை. மேலும் இந்நிலையில் எமது பெருந்தோட்ட மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.
எதிர்காலத்திலும் நாம் ஏமாறக்கூடாது. இந்நிலையில் எதிர்வரும் காலத்தில் ஆட்சிக்கு வரும் தரப்பினருக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே நாம் இன்று வீதிகளில் இறங்கி போராடுகிறோம். மேலும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் எமக்கான அடிப்படைகள் தேவைகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே இலக்கு என்றார்.
No comments:
Post a Comment