இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் பாராட்டு - நெருக்கடியிலிருந்து மீள எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கத் தயார் - News View

About Us

About Us

Breaking

Monday, October 3, 2022

இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் பாராட்டு - நெருக்கடியிலிருந்து மீள எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கத் தயார்

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கத் தேவையான மறுசீரமைப்புகளை ஏற்படுத்தவும், தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் இலங்கை எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தயாரென ஐரோப்பிய ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.

அத்துடன், ஜி.எஸ்.பி + வரிச் சலுகை தொடர்பில் இலங்கையின் முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டிருக்கும் மதிப்பீட்டு அறிக்கை இவ்வருட இறுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்படுமென்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டதைப் பாராட்டி, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் திருமதி உர்சுலா வொன் டெர் லயன் (Ursula von der Leyen) அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வாழ்த்துச் செய்தியில், "இலங்கை மக்கள் எதிர்பாரா சவால்களைச் சந்தித்துள்ளனர். இந்த நெருக்கடியிலிருந்து மீள, இலங்கை இந்தக் காலகட்டத்தில் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்.

நாட்டை மீண்டும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லவும், நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் தேவையான மறுசீரமைப்புகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

சட்டத்தின் ஆட்சி, கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடும் உரிமை, அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்துதல், அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்தல் என்பன இச்செயன்முறையின் மிக முக்கியமான அம்சங்களாகும். 

அதனடிப்படையில் இலங்கையின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெகு விரைவில் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ளும். இலங்கையரின் குறுகிய மற்றும் நீண்டகால நலன்களை உறுதி செய்யும் வகையில், நிலையான கொள்கைகளை அறிமுகம் செய்ய ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன்.

எதிர்பாராத பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு சர்வதேச நிதி நிறுவனங்களுடனும், கடன் வழங்குனர்களுடனும் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்க வேண்டுமென நான் வாழ்த்துகின்றேன். எமது உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், பொதுவான விருப்புகளின் அடிப்படையில் தொடர்ந்தும் உங்களுடன் மிக நெருக்கமாக பணியாற்ற நான் விரும்புகின்றேன்."

என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் திருமதி உர்சுலா வொன் டெர் லயன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment