ஜப்பானின் நிதியுதவி மூலம் சிறுவர்களின் போசணைத் தேவையைப் பூர்த்தி செய்வோம் - யுனிசெப் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 1, 2022

ஜப்பானின் நிதியுதவி மூலம் சிறுவர்களின் போசணைத் தேவையைப் பூர்த்தி செய்வோம் - யுனிசெப்

(நா.தனுஜா)

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் போசணைசார் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 500,000 டொலர் நிதியுதவியை வழங்கியுள்ள ஜப்பான் அரசாங்கத்தைப் பாராட்டியிருக்கும் யுனிசெப் அமைப்பு, சிறுவர்களின் போசணைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்களது போசணை மட்டத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் மந்த போசணை குறித்து ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கும் அந்நிதியைப் பயன்படுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கை மோசமடைந்து வருகின்ற நிலையில், மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்குவதாகக் கடந்த செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜப்பான் அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிதியுதவியானது சர்வதேச கட்டமைப்புக்களின் இலங்கைக் கிளைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும், அதன்படி மிக மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைவரத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் ஊடாக 2 மில்லியன் டொலர் பெறுமதியான உணவுப் பொருட்களும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான உணவு, போசணை, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும், யுனிசெப் அமைப்பின் ஊடாக 500,000 டொலர் பெறுமதியான போசணைப் பதார்த்தங்களும் வழங்கப்படும் என்றும் ஜப்பான் அரசாங்கம் விளக்கமளித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியின் விளைவாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் குடும்பங்களின் போசணைசார் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக 500,000 டொலர் நிதியுதவியை வழங்கியிருக்கும் ஜப்பான் அரசாங்கத்தைப் பாராட்டியிருக்கும் யுனிசெப் அமைப்பு, இந்நிதியானது சிறுவர்களின் போசணைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், அவர்களது போசணை மட்டத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும், மந்த போசணை குறித்து ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த மே மாதம் 20 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட 3 மில்லியன் டொலர் நிதியுதவிக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ள இந்த 3.5 மில்லியன் டொலர் நிதியுதவியின் மூலம் தற்போதைய நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியுதவியின் பெறுமதி 6.5 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment