மக்களாணைக்கு செல்வதை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் தவிர்க்கிறது : தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்க அவதானம் - டலஸ் அழகபெரும - News View

About Us

About Us

Breaking

Sunday, October 30, 2022

மக்களாணைக்கு செல்வதை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் தவிர்க்கிறது : தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்க அவதானம் - டலஸ் அழகபெரும

(இராஜதுரை ஹஷான்)

தேர்தலை பிற்போட எவரேனும் முயற்சித்தால் தான் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வேன் என குறிப்பிட்ட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவை பதவி நீக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. மக்களாணைக்கு செல்வதை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் தவிர்க்கிறது. உலகில் தூய்மையற்ற நபருக்கு ஏற்பட்ட கதியே இந்த அரசாங்கத்திற்கு ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

நாவல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான உத்தியோகபூர்வ பணிகள் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூக்கத்தில் இருந்து எழுந்ததை போல தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

தேர்தல் முறைமையை திருத்தம் செய்வதற்கு 15 விடயங்களை ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவை ஸ்தாபிக்குமாறு நீதியமைச்சர் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் முறைமை திருத்தம் செய்வதற்கு 2008ஆம் ஆண்டு முதல் இரண்டு பாராளுமன்ற தெரிவுக் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

தேர்தல் முறைமை தொடர்பில் நியமிக்கப்பட்ட இரண்டு பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவராக தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன பதவி வகித்தார். சிறந்த பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் கலப்பு தேர்தல் முறைமைக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறான பின்னணியில் ஏன் மீண்டும் தேர்தல் முறைமை தொடர்பில் புதிதாக தெரிவுக் குழுவை ஒன்றை நியமிக்க வேண்டும்.

தொழினுட்ப விடயங்களை காரணியாக கொண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் மாகாண சபைத் தேர்தலை போன்று பிற்போட அரசாங்கம் முயற்சிக்கிறது. மக்களாணையில் இருந்து தப்பித்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது.

தேர்தலை பிற்போட எவரேனும் முயற்சித்தால் தான் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வேன் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தற்துணிவுடன் தைரியமாக குறிப்பிட்டுள்ளார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரையும் பதவி நீக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

உலகில் அசுத்தமான நபராக குறிப்பிடப்பட்ட ஈரான் நாட்டு பிரஜை அண்மையில் உயிரிழந்தார். தனது தலை மற்றும் உடலில் நீர் பட்டால் தான் உயிரிழந்து விடுவதாக அந்த நபர் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் அப்பிரதேச மக்கள் அவரை பலவந்தமான முறையில் நீராட செய்துள்ளார்கள். நீராடிய ஒரு சில நாட்களுக்கு பிறகு அவர் உயிரிழந்து விட்டார். இவருக்கு ஏற்பட்ட கதியே இந்த அரசாங்கத்திற்கு ஏற்படும்.

தேர்தலுக்கு செல்ல அஞ்சும் இந்த அரசாங்கத்தை பலவந்தமான முறையில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிணைந்து முன்னெடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment