(எம்.மனோசித்ரா)
தேர்தல்களைக் காலம் தாழ்த்தும் முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டும். தேர்தலுக்கான தினத்தை அறிவித்தால் நிதி உதவிகளை வழங்க பல நாடுகள் தயாராக உள்ளன. அவ்வாறில்லை எனில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் எம்மால் நிதி உதவியைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
புதிய வரி திருத்த சட்ட மூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காவிட்டால் அதனை ஆதரிக்க முடியாது என்று தெரிவித்த அவர், தற்போது எதிர்க்கட்சியிடமே பெரும்பான்மை பலம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் (30) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தல் முறைமை தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு இதற்கான தெரிவுக்குழு தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டது. அன்று முதல் தற்போது வரை அக்குழுவின் தலைவராக அவரே செயற்பட்டு வருகின்றார்.
2012 இல் 2000 ஆகக் காணப்பட்ட உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை , தினேஷ் குனவர்தன தெரிவுக்குழுவின் தலைவராக பதவி வகித்த காலப்பகுதியிலேயே 8000 ஆக அதிகரித்தது.
தற்போது அந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்கின்றனர். இதில் எமக்கு எவ்வித அதிருப்தியும் கிடையாது. ஆனால் இதனைக் காரணமாகக் காண்பித்து தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு இடமளிக்க முடியாது.
சர்வதேச நாணய நிதியமும் விரைவில் தேர்தலை நடத்துவதே பொறுத்தமானது என்று வலியுறுத்தியுள்ளது. ஆனால் தேர்தல் ஆணைக்குழு இவ்விடயத்தில் மந்த கதியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
அரசாங்கம் புதிய வரி திருத்தம் தொடர்பில் எம்முடன் எவ்வித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை. ஆனால் அதற்கு எமது ஆதரவை மாத்திரம் கோருகின்றனர். சர்வதேச நாணய நிதியத்துடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் குறித்து வெளிப்படுத்துமாறு பல சந்தர்ப்பங்களில் கேட்ட போதும், அரசாங்கம் அதற்கு எவ்வித பதிலையும் வழங்கவில்லை.
எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடாமல் வரி திருத்தச் சட்ட மூலத்தை அரசாங்கத்தால் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. காரணம் தற்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கே பெரும்பான்மை காணப்படுகிறது.
நாம் ஆதரவு வழங்கியிருக்காவிட்டால் 22 ஐ நிறைவேற்றியிருக்க முடியாது. பொதுஜன பெரமுன நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு சென்றமையே இந்த வரி அறவீட்டுக் கொள்கைக்கான பிரதான காரணியாகும். எனவே இதனை எம்மால் ஆதரிக்க முடியாது. புதிய வரி திருத்தம் தொடர்பில் எம்முடன் கலந்துரையாடாவிட்டால் அதற்கு எதிராகவே வாக்களிப்போம்.
தற்போது ஆளுங்கட்சியிலிருப்பவர்கள் அடிமைகளாகவே உள்ளனர். அவர்கள் அரசாங்கத்தின் தீர்மானங்கள் தொடர்பில் கேள்வியெழுப்புவதில்லை. பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வரி சலுகைகளை வழங்கியமை தொடர்பில், அவரது கட்சி உறுப்பினர்களே கேள்வி எழுப்பியமையே அவர் பதவி விலகக் காரணமாகும். எமது நாட்டில் அந்த கலாசாரம் கிடையாது.
எது எவ்வாறிருப்பினும் தேர்தலை காலம் தாழ்த்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு தீர்மானத்தால் அதற்காக நிதி உதவிகளை வழங்குவதற்கு பல நாடுகள் முன்வரும். அவ்வாறில்லை எனில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் எம்மால் நிதி உதவிகளைப் பெற்றுக் கொடுக்க முடியும். எனவே செலவுகளைக் காரணமாகக் காண்பித்து தேர்தலை பிற்போடும் முயற்சி வெற்றியளிக்காது என்றார்.
No comments:
Post a Comment