சமூக கட்டமைப்பில் காணப்படும் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் ஆரம்பமாக 22 ஆவது திருத்தத்தை கருதுகிறோம் - டலஸ் அழகபெரும - News View

About Us

About Us

Breaking

Sunday, October 30, 2022

சமூக கட்டமைப்பில் காணப்படும் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் ஆரம்பமாக 22 ஆவது திருத்தத்தை கருதுகிறோம் - டலஸ் அழகபெரும

(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூக கட்டமைப்பில் காணப்படும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் ஆரம்பமாக அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை கருதுகிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

நாவல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இரட்டை குடியுரிமை உடையவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர்கள் என அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட 22 ஆவது திருத்தம் சபாநாயகரின் சான்றுரையுடன் நாட்டின் அடிப்படை சட்டமாக்கப்படும்.

பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இரட்டை குடியுரிமையை கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது நாட்டில் 19 ஆவது திருத்தம் நடைமுறையில் இருந்தது அவ்வாறாயின் இவர்கள் உண்மையை மறைத்து, முறையற்ற வகையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள்.

இரட்டை குடியுரிமை உடையவர்கள் தொடர்பில் முறையான நடவடிக்கைகளை சபாநாயகர் முன்னெடுத்து அரசியலமைப்பின் பிரகாரம் அவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்ய வேண்டும்.

அரசாங்கத்தின் தேவைக்காக அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுகிறது என நாட்டு மக்கள் குறிப்பிடும் நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.

அரசியலமைப்பு மீது நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டு சூழல் பாராளுமன்றத்தில் இருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் சபாநாயகர் முன்னிலையில் இருந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என்பதை வலியுறுத்தவுள்ளோம். அரசியல்வாதிகளும், அரச தலைவர்களும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட முடியாது.

No comments:

Post a Comment