(இராஜதுரை ஹஷான்)
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் எவ்வித நலன்புரி நிவாரணத்தையும் நாட்டு மக்கள் எதிர்பார்க்க முடியாது. வரி அதிகரிப்பு நாட்டு மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில் எப்பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளார் என்பதை நாட்டு மக்கள் ஆராய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.
வரவு செலவு திட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நாடு இன்று மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது என தான்தோன்றித்தனமாக செயற்பட்டதன் விளைவை இன்று முழு நாடும் எதிர்கொள்கிறது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதை காட்டிலும் வேறு எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலரை பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் விதிக்கும் கடுமையான நிபந்தனைகளை அரசாங்கம் தற்போது அமுல்படுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமையவே எரிபொருள், மின்சாரம், நீர் விநியோகம் ஆகியவற்றின் சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மறுபுறம் பல அத்தியாவசிய சேவை கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை நாளாந்தம் உயர்வடைந்து செல்கிறது.
நாட்டு மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வரவு செலவு திட்டம் தயாரிக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் வரி அதிகரிப்பு நிபந்தனைகளுக்கு அமையவே 2023ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவு திட்டத்தில் நாட்டு மக்கள் எவ்வித நிவாரணத்தையும் எதிர்பார்க்க முடியாது. வரி அதிகரிப்பு நாட்டு மக்களை மென்மேலும் பாதிப்பிற்குள்ளாக்கும்.
நாட்டு மக்களுக்கு எதிர்வரும் காலங்கள் மிக கடினமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுக் கொண்டு அவர் மாத்திரம் சுகபோகமாக முழு உலகத்தையும் வலம் வருகிறார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள போதும் எந்த பிரச்சனைக்கு அவர் தீர்வு கண்டுள்ளார் என்பதை நாட்டு மக்கள் ஆராய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment