நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் மிகத் தீவிரமடையும் அபாயம் : யாருடைய தீர்மானங்கள் சரி என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள் - இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 30, 2022

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் மிகத் தீவிரமடையும் அபாயம் : யாருடைய தீர்மானங்கள் சரி என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள் - இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் மிகத் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான காலம் நெருங்கி வருகின்றது. அதன்போதே யாருடைய தீர்மானங்கள் சரி என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

ஆளுநராக தான் பதவி வகித்த 203 நாட்களில் 446 பில்லியன்கள் பெறுமதியான நாணயமே அச்சிட்டதாகவும், அதன் பின்னரான குறித்த காலத்தில் 691 பில்லியன் நாணயம் அச்சிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் தீர்க்கமான கட்டத்தினை அடைந்துள்ளதோடு, கடன் மறுசீரமைப்புக்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வீரகேசரியிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடியான நிலைமைகள் ஏற்பட்டபோது, நாம் சில கடுமையான தீர்மானங்களை எடுத்தோம். சிரமங்களுடன் அதனை ஏற்றுக் கொள்வதற்கு மறுத்தவர்கள் நாம் தவறானவர்களாக சித்திரித்தார்கள். மக்களை தூண்டிவிட்டார்கள்.

அதனை பயன்படுத்தி அதிகாரத்தினை தற்போது பெற்றுக் கொண்டுள்ளவர்கள் மிகவும் ஆபத்தான செயற்பாடுகளை தயக்கமின்றி முன்னெடுக்கின்றார்கள். இதனால் நாட்டில் பொருளதார ரீதியாக மேலும் நெருக்கடிகள் தீவிரமடையும் அபாயமே அதிகரித்துள்ளது.

குறிப்பாக கூறுவதானால், நான் மத்திய வங்கியின் ஆளுநராக 203 நாட்கள் இறுதியாக பதவி வகித்திருந்தேன். அக்காலத்தில் 446 பில்லியன் நாணயமே அச்சிடப்பட்டது. அத்துடன் வங்கி வட்டி வீதம் 10 சதவீதமாக இருந்தது. பணவீக்கம் 18 சதவீதமாக இருந்தது.

எனது பதவி விலகலுக்குப் பின்னர், குறிப்பிட்ட 203 நாட்கள் காலப்பகுதியில் 691 பில்லியன் நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. வங்கி வட்டி வீதம் 33 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் 75 சதவீதமாக காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்கு செல்கின்றபோது அத்தரப்பினரால் முன்வைக்கப்படும் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைமைகள் ஏற்படும். அவ்வாறான நிலையில் கடுமையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

தற்போதைய நிலைமையில் வரி விதிப்பானது மும்மடங்கால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை மேலும் அதிகரிப்பதற்கே சந்தர்ப்பங்கள் உள்ளன. அவ்வாறான சூழல் ஏற்படுகின்றபோது சாதாரண பொதுமக்களே பாதிக்கப்படப்போகிறார்கள். அச்சமயத்திலேயே யாருடைய தீர்மானங்கள் சரியானவை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்றார்.

No comments:

Post a Comment