கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக் காலத்தில் வெளிநாடுகளுக்கு நியமிக்கப்பட்ட இராஜதந்திரிகள் அல்லாத உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் பலர் மீள அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா.வுக்கான நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ.சந்திரபிரேம திருப்பி அழைக்கப்படவுள்ளதுடன், தற்போது நேபாளத்துக்கான இலங்கை தூதுவராக உள்ள ஹிமாலி அருணாதிலக ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்படவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட 21 நாடுகள் வாக்களித்திருந்தன.
இந்த நிலையில் குறித்த பின்னடைவானது இராஜதந்திரத் துறையில் அனுபவமற்றவர்கள் முக்கிய நாடுகளின் இராஜதந்திர சேவையில் பணிக்கமர்த்தப்பட்டமையால் ஏற்பட்ட விளைவாகவே தற்போதைய அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்தே தொழில் வாண்மைமிகு இராஜதந்திரிகள் தவிர்ந்த ஏனையவர்களை மீள அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஐ.நா.வுக்கான வதிவிடப் பிரதிநிதியாக பதவியில் உள்ள சந்திரப்பிரேம 'கோட்டாவின் போர்' என்ற நூலை எழுதியவர் என்பதோடு, அவர் அரசியல் நிருபராகவே பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இந்தியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவும் கொழும்புக்கு திருப்பி அழைக்கப்படவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டபோதும் அவர் எப்போது மீளத் திரும்புவார், அவருடைய வெற்றிடத்துக்கு புதிதாக யார் நியமிக்கப்படப் போகின்றார்கள் என்பது பற்றிய உறுதியான தகவல்கள் எதுவுமில்லை.
அதேவேளை சீனாவுக்கான தூதுவராக பணியாற்றிவரும் கலாநிதி பாலித கொஹன்னவின் பதவிக் காலம் இந்த வருட இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில், அவரது இடத்துக்கு நேபாளத்தில் உள்ள சார்க் செயலகத்தில் செயலாளராக பணியாற்றும் எசல வீரக்கோன் நியமிக்கப்படவுள்ளார்.
பிரான்ஸுக்கான உயர்ஸ்தானிகராக பணியாற்றும் கனிஷ்க ஹிரும்புரேகம திருப்பி அழைக்கப்படவுள்ளதுடன், அவருக்குப் பதிலாக தென் கொரியா மற்றும் பிரித்தானியாவில் பணியாற்றிய மனிஷ குணசேகர நியமிக்கப்படவுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக சித்ராங்கனி வகீஸ்வரா நியமிக்கப்படவுள்ளதோடு வெற்றிடமாக உள்ள ஜெர்மனி மற்றும் நேபாளம் உள்ளிட்ட இதர நாடுகளுக்கான உயர்ஸ்தானிகர் மற்றும் தூதுவர் பதவிகளும் விரைவில் நிரப்பப்படவுள்ளன.
இதேவேளை மேற்படி மாற்றங்களை உறுதிப்படுத்திய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தொழில் வாண்மையற்ற இராஜதந்திரிகளின் நியமனத்தினால் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை மறுசீரமைத்து, எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை உட்கொண்டுவரும் நோக்குடன் புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment