(இராஜதுரை ஹஷான்)
நாடு பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவை அமைச்சினை மேலும் விஸ்தரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளமை வெறுக்கத்தக்கதொரு செயற்பாடாகும். மக்கள் அங்கிகாரமற்ற அரசாங்கத்தை பாராளுமன்ற ஜனநாயகத்துக்கமைய வெகுவிரைவில் வீழ்த்துவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
களுத்துறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மீது நாட்டு மக்களுக்கு நன்மதிப்பு கிடையாது. மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பொருளாதார பிரச்சினைகளுக்கு உணர்வுபூர்வமாக தீர்வு காண அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டில் எப்பிரச்சினையும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.
நாட்டில் நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் அரசாங்கம் இந்த வாரம் 12 அமைச்சரவை அமைச்சுக்களை புதிதாக நியமிக்கவுள்ளது.
38 இராஜாங்க அமைச்சுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இவர்களினதும், இவர்களின் பணி குழுவினருக்கும் 320 வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
இந்நிலையில் அரசாங்கம் அமைச்சரவையை மேலும் விரிவுப்படுத்த அவதானம் செலுத்தியுள்ளது. மறுபுறம் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களுக்கு 320 லீற்றர் எரிபொருளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டு மக்கள் மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அரசியல்வாதிகளுக்கு விசேட வரப்பிரசாதங்கள் வழங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பாராளுன்ற கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் தலைவர் பதவியை எதிர்க்கட்சியினருக்கு வழங்க அரசாங்கம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
கோப்,கோப் குழுவின் தலைவர் பதவி ஆளும் தரப்பினருக்கு வழங்கப்பட்டால் ஊழல் மோசடி மேலும் தீவிரமடையும்.
அரசாங்கத்தை வீழ்த்த சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறது என அரசாங்கம் குறிப்பிடுகிறது. மக்களால் வெறுக்கப்படும் அரசாங்கத்தை வீழ்த்த பகிரங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
பாராளுமன்ற ஜனநாயக முறைக்கமைய வெகுவிரைவில் அரசாங்கத்தை வீழ்த்துவோம். நாட்டு மக்களும் அதனையே எதிர்பார்க்கிறார்கள் என்றார்.
No comments:
Post a Comment